- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[1- 27]
1.
சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்
2.
டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே
3.
செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்
4.
கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா
5.
மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே
6.
மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்
7.
தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி
8.
மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும்
பொருள் :
சிறப்புப் பொருந்திய கூடலென்ற சிவராசதானியைக்
காத்து அழகு பொருந்திய சங்கத்திற் புலவராயிருந்தவரும், பல திசைகளிலுஞ்
சென்று போர்புரிந்து வாய்ந்த தமிழரசி யென்று பலரும் வாழ்த்தித் துதிப்பத்
திசைதோறும் தன் வெற்றியைத் தோற்றுவித்த பெண்ணரசியும்,
விருப்பமுறும்படி திருத்தமான சிவஞானத் தொகுதியுடைய ஏட்டுச் சுவடிகளில்
ஓர் ஏட்டினைக் கையிலெடுத்தெறிந்த கணபதியும், உண்மையருளால்
மதுரையை அரசு புரிந்து ஒருகாலத்தில் மதுரைச் சங்கப் புலவரெதிரமர்ந்து
பாடலின் சிறப்பையுணர்த்திய வேற்படையுடைய முருகக்கடவுளும், மனையை விட்டு நீங்காத இளமைவாய்ந்த மூன்றாண்டுப் பருவத்தின் வடமொழி நூல்களும் தென்மொழி நூல்களும் தாயாகிய உமையம்மையா ரூட்டிய ஞானத்தோடு கலந்த முலைப்பாலானறிந்தவரும், மூன்றாண்டுக்கு முன்னர் முதலையுண்ட பிள்ளையை மூன்று விழியார்முன் கவிபாடிப் பின்பெற்றுத் தரும்படி தமிழாலுரைத்தவரும், பிரமனும் திருமாலுந் தோன்றும்படி தேடியும் அறியமுடியாத சிவபெருமான் திருவடியைத் திரு நல்லூரிற் செய்யுள்பாடித் தம் முடியாகப் பெற்றுக் கொண்டவரும், ஆய்ந்து தம் முடியில் மணமுள்ள தாழம்பூவைச் சூடாதவராகிய சிவபெருமான் ஓலையை வாரிச் சேர்த்துத் தம் பட்டோலையில் எழுதிக் கொள்ளுமாறு செய்யுள் பகர்ந்தவரும்.
8.
..........................முட்டாதே
9.
ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் – மல்காச்சொற்
10.
பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்
11.
தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும்
12.
தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் – செந்தமிழிற்
13.
பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்
14.
காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங்
15.
கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரு நீயா யிருந்தமையாற்
தடைபடாமல் குறையாத பெருமைத் தமிழ் மூன்றினையும்
ஓதிய பெரிய முனிவனும், தொல்காப்பியம் என்ற இலக்கணத்தைக் கூறிய
பழைய முனிவனும், குறையாத சொல்லமைந்த பாவின் நிலைமையைக்
கொண்டு முதல்வன்பாற் செல்லும் உயிர்களை (அவற்றின் இயலை)
பன்னிரண்டு நூற்பாவைக் கொண்டு முடித்த தூய்மையுடையவரும், இருவிழிகளாகிய குற்றமில்லாத கவிதை பாடும் திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர் யாவரும், குலத்தாலும் உற்ற சூழ்ச்சியாலும் நீங்காத உயிர்களைச் சாரும் வினைகளையெல்லாம் தாம் சாற்றிய மந்திரம் என்ற நூலினால் நீக்கிய வல்லவரும், செந்தமிழிற் பொய்யடிமையில்லாத புலவரென்று புலவர்களாற் புகழ்ந்து கூறப்பட்ட உண்மைத் தொண்டராகிய சங்கப் புலவர்களும், ஐயடிகள் காடவர்கோன் என்பவரும், செம்மையான (திருத்தமான) சொற்களையுடைய கழறிற்றறிவார் என்பவரும், பாடுவதற்கு அருமையான தெய்வமொழிப் பாவலரும், ஆராய்தற்கு அருமையான கல்லாத மூடர்கட்குச் சிங்கம் போன்ற கல்வி கேள்வியிற் சிறந்த எல்லாரும் நீயாயிருந்தமையால்.
15.
..................சொல்லாரும்
16. என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன்
பொருள் :
கழ் நிறைந்த எனக்கு வாய்த்த தெய்வமே உன்னைக்
கண்டு துதித்தால் என் குறைகள் எல்லாம் நீங்கும் என்று கருதி நின் பொன்
போன்ற திருவடிகளையே புகலாகக் கொண்டு போற்றுகின்றேன்.
..........................பன்னியமென்
17.
பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறந்
18.
தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகந்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா
19.
தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப்
19.
பொருள் :
நெருங்கிய மெல்லிய பஞ்சியால் நூற்கப்படாத நூலே!
பலரால் நெருடப்படாத பாவே! கிழிந்து குறைந்து அழுக்குப்படாத இயல்புள்ள
கலையே! மிஞ்சிய நிறம் தோயாத செந்தமிழே! சொல்லினை ஏராகக்
கொண்டுழும் புலவர் மனம் கருகாது சொல்லை விளைக்கும் செய்யுளே! ஒரு
குலத்தினும் பிறவாமல் இறவாமல் உயிர்க்குயிராக நின்றாய். வந்த குலங்கள் ஐந்தாகவும் தோன்றிவளர்ந்தாய்.
...........................இருநிலத்துப்
20.
புண்ணியஞ்சே ருந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித்
21.
தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி
22.
ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய்
22.
பொருள் :
பெருமை தங்கிய புவியிற் புண்ணியம் வாய்ந்த
உந்தியிடத்தில் காற்றுத் தங்கிப் பின் வாக்கு ஆகிய சூற் கொண்டிருந்து
தலையும் கழுத்தும் மூக்கும் மார்பும் ஆய நான்கிடத்தினும் சார்ந்து உதடும்
நாக்கும் பல்லும் கெடாத மேல் வாயும் ஆய கருவிகளால் வடிவமாகித்
தலையினின்று மீண்டு ஏற்குமாறு முதலெழுத்து முப்பதாகவும் சார்பெழுத்து
இருநூற்று நாற்பதாகவும் நன்றாகப் பிறந்தாய்.
..................மேற்படவே
23.
எண்முதலா கப்பகரு மீரா றெனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணியோற்
24.
பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு
25.
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு
25.
மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்
26.
பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ
27.
நினையும் படிப்பெல்லா நின்னைப் படிப்பார்
உளையும் படிப்பிப்பா டுண்டோ-புனைதரு நற்
பொருள்:
இவ்வாறு நீ பிறந்ததற்கு மேற்பட்டு எண் முதலாகச்
சொல்லும் பன்னிரண்டு பகுதிகளாகச் செய்து மண்ணுலகிற் பிறந்த
முதன்மையுடையோர் வளர்க்குங்காலத்தில் ஆசிரியர்கட்குக் கண்மணிபோல் விளங்கிப் பள்ளிக்கூடத்தில் அசையாம் பலப்பல தொட்டில்களிற் படுப்பித்துச் சிறுவர் கூடித் தள்ளித் தாலாட்டி உள்ளிடம் விளங்கும்படி மஞ்சளாற்றேய்த்துக் கழுவி மையிட்டு மூன்று பாலும் மிகுதியாகப் புகட்ட உயர்ந்து வளர்ந்தாய். மைந்தர் களையே பத்துப் பருவமாக்கி நீ வளர்க்கின்றாய்; அத்தகைய இயல்பு வாய்ந்த நின்னை யொருவரால் வளர்த்துவிடக் கூடுமோ?கூடாதன்றோ? முதலில் நினைக்கும் கல்வி யெல்லாம் நின்பாலே யுள்ளனவென வுணர்ந்து நின்னைப் படிக்கும் இயல்புடையவரே மனிதர் எல்லாரும். உனக்குச் கற்பிப்பவர் ஒருவருண்டோ? இல்லை.
- மதுரை சொக்கநாதர்
Comments
Post a Comment