- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
முத்தொள்ளாயிரம்(sem-2)
பாண்டியன்
புகழ் :
பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் -சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார் வேந்தர் மார்பு .
பொருள் :
வலிமை உடையவனாகிய பாண்டியன் மாறனின் நிலத்தில் செம்மை நிறமான பொன் விளைகிறது .வளம் பொருந்திய ஊரில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல்களும் வளர்கின்றன .கடலில் வெண்மை நிறமுடைய சங்குகளும் முத்துகளும் கிடைக்கின்றன . ஓங்கிய மலைச் சாரலில் யானைகள் பெருகுகின்றன .
மாறனின் கூர்மையான வேல், மாலை அணிந்த பகைநாட்டு மன்னர்களின் பரந்த மார்பில் பட்டுப் பகை முடிப்பதாகும் .
திறை :
நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் -ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள் .
பொருள் :
பூவுலகத்தைத் தாங்கும் தோள்களில் வெற்றி மாலையை அணிந்திருக்கும் பாண்டியன் விரும்பப்படுகின்ற சிறப்புடைய வெண்கொற்றக் குடையின் காவலனும் ஆவான் .அவனுடைய ஆணையினால் ,பொன்னாலும் ஒளியுடைய மணிகளாலும் இயன்ற அணிகலன்களை அணிந்திருக்கும் கண் இமைக்காத இயல்புடைய தேவர்கள் தங்களின் பாதங்களைப் பூமியில் மிதிக்காமல் தூக்கிக் கொண்டு திரிகின்றனர் . அவர்கள் பூமியில் கால் வைத்தால் திறை கொடுக்க வேண்டும் .
கைக்கிளை
கார்நறு நீலம் கடிகயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ -கூர்நுனைவேல்
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியால்
கொண்டிருக்கப் பெற்ற குணம் .
பொருள் :
கூர்மையான நுனியினை உடைய வேல் படையினையும் வண்டுகள் நெருங்கி மொய்க்கும் தேன் நிறைந்த மலர் மாலையினையும் விரைந்த தாவுதலை உடைய குதிரையினையும் கொண்டிருக்கும் பாண்டியனைக் கருமையும் நல்ல மனமும் நிறைந்த குவளை மலர் சார்ந்திருப்பது எவ்வாறு ? அது மணமுடைய நீர் நிலையில் தன்னுடைய ஒற்றைத் தாளில் நின்று தவம் செய்ததால் தானோ ?
சோழன் :
யானை மறம் :
கொடிமதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்
முடி இடறித் தேய்ந்த நகமும் -பிடி முன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார் தோள்கிள்ளி களிறு .
பொருள் :
மலையை ஒத்து விளங்கும் வலிமையான தோள்களை உடைய கிள்ளிவளவனின் யானை ,கொடி நின்று விளங்கும் கோட்டைச் சுவர்களில் மோதி அதனைச் சிதைத்ததால் உடைந்த கொம்புகளுடனும் பகைநாட்டு அரசர்களின் பொன்னால் ஆகிய மணிமுடிகளைக் காலால் உதைத்த காரணத்தால் தேய்ந்த நகங்களுடனும் இருக்கின்ற காரணத்தால் அழகில்லாமல் இருப்பதை எண்ணி நாணம் கொண்டு பெண் யானையின் இருப்பிடம் செல்லாமல் வாயிலின் வெளிப்புறமே நின்றுவிட்டது .
களம் :
முடித்தலை வெள்ளோட்டு மூலைநெய் யாகத்
தடித்த குடல்திரியா மாட்டி -எடுத்து எடுத்துப்
பேஎய் விளக்கு அயரும் பெற்றிருத்தே செம்பியன்
சேஎய் பொருத களம் .
பொருள் :
செம்பியன் என்னும் சோழமன்னனின் மரபில் பிறந்த குழந்தையாகிய சோழ மன்னன் போர் செய்த போர்க்களம் மணிமுடி அணிந்து போர்செய்த மன்னர்களின் தலையில் இருந்து சோழனின் வீரச் செயலால் உடைந்து விழுந்த வெண்மை நிறமுடைய மண்டை ஓட்டினை அகலாகவும் மூளையினை நெய்யாகவும் மன்னர்களின் திரட்சியான குடல்களை திரியாகக் கொண்டு பேய்கள் குடல்களை எடுத்து எடுத்து அகலில் இட்டு விளக்கு எரிக்கும் தன்மையதாக விளங்கும் .
கொடை :
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்திரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் - எந்தை
இலங்கு இலைவேல் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு .
பொருள்:
என்னுடைய தந்தையாகிய விளங்குகின்றவனும் இலையின் வடிவாக ஒளி பொருந்தியதுமான வேலினைக் கொண்ட கிள்ளிவளவன் இரேவதி நட்சத்திரமான தான் பிறந்த நாளில் அறவோர்களான அந்தணர்களுக்குப் பசுக்களோடு பொன்னைக் கொடுத்தான் . கல்வியில் நிறைவுடைய புலவர்களுக்கு மந்தார மலையினைப் போன்ற யானைகளை பரிசாகக் கொடுத்தான் . அவர்கள் யானையில் ஏறி அதனை வழிநடத்திச் சென்றனர் .அந்த நாளில் சிலம்பி என்னும் பூச்சி மட்டும் தன்னுடைய கூட்டினை இழந்தது எவ்வாறு ?
சேரன் :
புகழ் :
வானிற்கு வையகம் வென்றது வானத்து
மீனிற்கு அனையார் மறமன்னர் -வானத்து
மின்சேர் மதியனையான் வின்உயர் கொல்லியர்
கோன்சேரன் கோதை என் பான் .
பொருள் :
வானுலகிற்கு மண்ணுலகம் ஒப்புமையாகக் கூறப்படும் தன்மையானது . சேரமன்னனை வந்தடைந்த மன்னர்களின் எண்ணிக்கையின் மிகுதியால் வானில் ஒளிதரும் நட்சத்திரங்களுக்கு ஒப்புமையாயினர்.வானை தொடுமளவு உயர்ந்த கொல்லி மலையில் வாழ்பவர்களுக்கு மன்னனாகியவனும் கோதை என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவனாகிய சேரன் விண்மீன்கள் சூழ்ந்த நிலவை ஒத்து விளங்கினான் .
நாடு :
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது எனவொரீஇப் -புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வையுடைத் தாரோ
நச்சிலைவேல் கோக் கோதை நாடு .
பொருள் :
சேறு நிறைந்த குளங்களில் செம்மை நிறமுடைய ஆம்பல் பூக்கள் இதழ்களை விரித்து மலரத் தொடங்கின. அதனைக் கண்டப் பறவைகள் நீர் தீப்பிடித்தது என்று எண்ணிக்கொண்டு தங்கள் சிறகுகளால் குஞ்சிகளைக் காத்துக்கொண்டு ஆரவாரம் செய்தன . சேரனுடைய நாட்டில் இத்தகைய ஆரவாரம் உண்டே தவிர நஞ்சு தோய்க்கப்பட்டதும் ஒளிமிக்கதுமான வேலினை உடைய சேரனின் நாட்டில் அச்சம் கொள்ளத்தக்க ஆரவாரம் எதுவும் இல்லை .
கைக்கிளை :
ஏற்று ஊர்தியானும் இகல்வேம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்து ஒன்றின் -ஒவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன்று இரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண் .
பொருள்:
காளையை வாகனமாகக் கொண்ட சிவ பெருமானும் போர்க்களத்தில் கொடுமையான போரைச் செய்கின்ற சேரமன்னனும் வலிமையினால் செயல் முடிக்கும் திறனாலும் ஒப்புமை உடையவர்களாய் விளங்குகின்றனர். ஆனால் மழுப்படையினை உடைய சிவபெருமானுக்கு கண்கள் மூன்றாகும். ஆற்றலில் சிறந்து விளங்குகின்ற சேரனுக்குக் கண்கள் இரண்டாகும்.