சித்தர் பாடல்கள் -சிவ வாக்கியர்

சித்தர் பாடல்கள் -சிவ வாக்கியர்(sem-2) 

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.
*****************************************************
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு  அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். 
*****************************************************
மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில் முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.  
*******************************************