திருமந்திரம்



திருமந்திரம்(sem-2)  


யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ,

வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில் 

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.



பொருள் :

       நம் உடலுக்குள்ளே ஒரு மந்திரமானது உணர்வு வடிவில் உள்ளது. அதை சொல்லிடின், இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறை பொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும். அப்படி தனக்கு தலைப்பட்டதால் வந்த இன்பம் இந்த உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று விழைகிறார் திரு மூலர்.  



ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு 

பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு 

சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு 

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே .


பொருள் :

    உயிர் உடலில் இருக்கும் வரை அவனுடன் வாழ்ந்த மனைவி ,குழந்தைகள் ,உறவினர் ,சுற்றத்தார்,ஊரார்கள்,என்று அனைவருமே அவன் இறந்த பின் ஒன்றாகக் கூடி சத்தம்போட்டு அழுது புலம்பிவிட்டு ,அவனுக்கு அதுவரை வைத்திருந்த பேரைச் சொல்லிக் கூப்பிடாமல் பிணம் என்று ஒரு பேரை வைத்து ,அனைவரும் சேர்ந்து அவனுடைய உடலை எடுத்துச்சென்று ஊருக்கு வெளியில் இருக்கும் சூரைப்புற்கள் நிறைந்த  சுடுகாட்டில் வைத்து அதை எரித்துவிட்டு , அந்த உடலைத் தோட்டத்தை தீட்டு என்று சொல்லி அதைப் போக்க ஆற்றினில் மூழ்கி எழுந்தபின் ,மெல்ல மெல்ல அவனை பற்றிய நினைவுகளையும் மறந்து போவார்கள் .



அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.


பொருள்:

அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும், அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும் கூறுகின்றார் திருமூலர்.



படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே


பொருள்:

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே 

பொருள் :

குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை.