மழைக் காலப் பூக்கள் - வைரமுத்து

 மழைக் காலப் பூக்கள் - வைரமுத்து

அது ஒரு
காலம் கண்ணே
கார்காலம் !
நானும் நீயும்
நனைந்து கொண்டே
நடக்கிறோம்!
ஒரு மரம் 
அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருக்கிருந்தது!

இருந்தும்
அந்த
ஒழுகுங்குடையின் கீழ்
ஒதுங்கினோம்
அந்த மரம்
தான் எழுதி வைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக் கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க் காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன
சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப் பாதையில்
ஓடிக் கொண்டிருந்தன !

அந்தி மழைக்கு நன்றி !

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது
ஆயினும் – நான்
என் பெருமூச்சில்
குளிர்காய்ந்து கொண்டிருந்தேன்

நம்
இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது
எவ்வளவோ பேச
எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊர்வலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன் முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
 இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத் தெறித்தன
உனக்குப்
பொன்னாடை போர்த்தும்
கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ
நீட்டினாய்
நான் கேட்டேன்
“இந்தக் கைக்குட்டை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக் கூடாதா?"
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இதயத்துக்குள் பெய்தது
அது ஒரு
காலம் கண்ணே !

கார் காலம்.



   மழையோடு கூடிய மாலை நேரத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டனர். அப்போது நடந்த இன்ப மன உணர்வுகளைக் காதலர்கள் பின்பொருநாள் அசைப்போட்டுப் பார்த்து மகிழ்கின்றனர். 

   “ஒரு கார் காலத்தின் மாலை நேரத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் வேளையில் மழை பெய்யத் தொடங்குகின்றது. அந்த மழைப் பொழிவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள காதலர்கள் இடம் தேடி நடக்கின்றனர். அப்போது ஒரு மரம் தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அந்த ஒழுகும் குடை போன்ற மரத்தின் கீழ் காதலர்கன் இருவரும் தஞ்சம் அடைகின்றனர். நாம் நம் உறவினர்களை வரவேற்று உபசரிப்பதைப் போல அந்த மரமும் அடைக்கலம் தேடி வந்த காதலர்களைத் தன்னிடம் இருக்கக் கூடிய பூக்களை வரவேற்புக் கவிதை போலத் தூவி வரவேற்கிறது. மரத்தின் மீதுள்ள இலைகளோ காசுகளைப் போன்ற நீர்த் துளிகளை அவர்கள் மீது சிந்துகின்றன. இலைகள் சிந்திய நீர்த் திவலையில் சில துளிகள் தலைவியின் நேர்வகிட்டில் முத்துத் துளிபோல் ஓடிக் கொண்டிருக்கின்றன. அது தலைவியின் தலைக்கு நெற்றிச் சுட்டி வைத்ததைப் போல அழகு செய்கிறது. தலைவியின்; அழகுக்கு அழகு செய்த அந்தி நேரத்து மழைக்குத் தலைவன் நன்றி செல்கிறான். மழையோடு கூடிய மாலை நேரத்து குளிர்ந்த சூழல் இருவரின் உள்ளத்தையும் குளிர்ச்சிப்படுத்தியிருந்தது. ஆயினும் தலைவன் தன் பெருமூச்சில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறான். இத்தகைய அளரவமற்ற தனிமைச் சூழலிலும் இருவரும் நாகரீகத்தோடு அமர்ந்திருக்கின்றனர். எவ்வளவே பேச எண்ணிச் சந்தித்துக் கொண்ட காதலர்கள் குளிர்ந்த சூழலால் பேச வார்த்தைகளற்று அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போது நீர்த் திவலைகள் தலைவியின் நெற்றியில் பட்டுத் தெறித்தன. ஆவை அழகான பூவின் மீது பனித்துளி வீற்றிருக்கும் பெருமிதத்தோடு தலைவியின் நெற்றியில் வீற்றிருந்தன. அந்த நேரத்தில் தலைவன் தலைவிக்குப் பொன்னாடை போர்த்துவது  போன்ற கார்வத்தோடு தன் கைக்குட்டையை எடுத்து நீட்டினான். அதில் தலைவி தன் நெற்றியை ஒற்றி, நீர்த் துளிகளைத் துடைத்துவிட்டுத் தந்தாள். அந்தக் கைக்குட்டையைப் பெற்றுக் கொண்ட தலைவன் காதலியிடம் கேட்கிறான் இந்த கைக்குட்டை உலராமல் இருக்க ஓர் உத்தி சொல்லக்கூடாதா? எனக் கேட்கிறான். அப்போது தலைவி சிரிக்கிறாள். வெளியில் பெய்த மழையைப் போல காதலர்களின் உள்ளத்திலும் மகிழ்ச்சி மழை பெய்தது. அது ஒரு காலம் கார்காலம்.” 

   இதில் தலைவன் முன்பொருநாள் நடந்த மகிழ்ச்சியான தருணத்தை அசைபோட்டுப் பார்த்து தலைவியோடு மகிழ்வதாக கவிஞர் வைரமுத்து படைத்துள்ளார். 

Comments