திருக்குறள் - இல்வாழ்க்கை

 திருக்குறள்

இல்வாழ்க்கை- அதிகாரம்-5


குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

குறள் விளக்கம்:

ஏழை எளியவர், சுற்றத்தார், குடும்பத்தார் என மூவருக்கும், இல்வாழ்க்கையில் இருப்பவர்தான் உதவி செய்து உற்றதுணையாக இருக்க முடியும்.


குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

குறள் விளக்கம்:

போதும் என்ற நிறைவை அடைந்தவர், போற்றத்தகுந்தவர், வறியவர்கள் என அனைவருக்கும் இல்வாழ்க்கையில் இருப்பவனே துணையாக இருப்பான்.


குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

குறள் விளக்கம்:

தெய்வமாக உறைந்த மூதாதையர், உற்றார் உறவினர், சுற்றத்தார், குடும்பத்தார் மற்றும் விருந்தினர்களை உபசரிப்பதுதான் இல்வாழ்க்கையில் முதன்மையானது.


குறள் 44:

பழியஞ்சிப் பார்த்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

குறள் விளக்கம்:

யாரும் பழிசொல் சொல்லாதவாறு அனைவருக்கும் பகுந்துண்டால் வாழ்க்கைப் பாதையில் எந்த இடையூறும் இருக்காது.


குறள் 45:

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

குறள் விளக்கம்:

அன்பும் அறநெறியும்தான், இல்வாழ்க்கையை பண்புடையதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.


குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன்.

குறள் விளக்கம்:

அறநெறியுடன் கூடிய இல்வாழ்க்கையைவிட மேலானதை யாரால் பெற முடியும்.


குறள் 47: 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

குறள் விளக்கம்:

இல்வாழ்க்கையில் இயல்பாக இருப்பவனே, வாழ்வின் உண்மையை அறிய முற்படுபவர்களில் தலையானவன்.


குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

குறள் விளக்கம்:

வாழ்வின் முறை அறிந்து, அறத்துக்குக் கேடு செய்யாத இல்வாழ்க்கையே தவ வலிமையையும்விட வலிமையானது.


குறள் 49:

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

குறள் விளக்கம்:

அறமே இல்வாழ்க்கை; அது யாரும் குற்றம் சொல்லாத இல்வாழ்க்கையாக இருப்பது நல்லது.


குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

குறள் விளக்கம்:

வாழும் நெறியறிந்து இல்வாழ்க்கையில் ஈடுபடுபவரே, தெய்வத்துக்கு நிகரானவராக மதிக்கப்படுவார்.


-திருவள்ளுவர்

Comments