- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மணிமேகலை -ஆதிரை பிச்சையிட்ட காதை
'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர்
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி இழை தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
"காணம் இலி" என கையுதிர்க்கோடலும்
வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
"இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்
சாதுவன் தானும் சாவுற்றான்" என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
"ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
"மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
"தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும்
"ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐயரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும்
நக்க சாரணர் நயமிலர் தோன்றி
பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும்
மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்
கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய்
ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீ" என அவருடன் போகி
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக்
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
"ஈங்கு நீ வந்த காரணம் என்?" என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
"அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
"வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும்
"பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என
தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும்
"மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனை ஆக!" என கடு நகை எய்தி
"உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை
செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ"
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
"கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும்
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும்
"நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன்
"ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப்
"பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை
உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்குஇவை
விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு
இவைஇவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து
சந்திர தத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்துஉடன் ஏறி
இந்நகர் புகுந்துஈங்கு இவளொடு வாழ்ந்து
தன்மனை நன்பல தானமும் செய்தனன்,
ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென,
மனையகம் புகுந்து மணிமே கலைதான்
புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என்
பொருள்:
ஆதிரையின் செய்தியைக் கேள் என்று சொல்லிக்கொண்டு அறவண அடிகள் மணிமேலைக்குக் கூறுகிறார்.
ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தகைமை இல்லாதவனாக ஆதிரையை விட்டுவிட்டுக் கணிகை ஒருத்தியோடு வாழ்ந்துகொண்டு வட்டாட்டத்திலும் சூதாட்டத்திலும் தன்னிடமிருந்த வானளாவிய செல்வத்தை இழந்துவிட்டான்.
அதனால் உறவினர்களும், அவனைப் பேணிவந்த கணிகையும் அவனைக் காசு இல்லாதவன் என்று கைவிட்டு விட்டனர். அதனால் வங்கக் கப்பலில் பொருளீட்டச் செல்லும் வணிகர்களுடன் சேர்ந்து பொருளீட்டும் ஆசையில் சென்றான்.
நள்ளிரவில் புயல் வந்து கப்பலைக் கவிழ்த்தது. அதில் ஒடிந்த மரத்துண்டுகளைப் பற்றிக்கொண்டு சிலர் உயிர் தப்பினர். சாதுவன் அம்மணமாக நாகர் இன மக்கள் வாழும் மலைக்கு வந்து சேர்ந்து அந்த மலைமக்களோடு ஒன்றிவிட்டான். ஒடிந்த மரத் துண்டுகளைப் பற்றிக்கொண்டு நாடு திரும்பியோர் சாதுவன் இறந்துவிட்டான் என்று ஆதிரைக்குக் கூறினர்.
அதனைக் கேட்ட ஆதிரை ஊர் மக்களைத் தீ மூட்டச் செய்து, "என் கணவன் சென்ற இடத்துக்கு நானும் செல்வேன்" என்று கூறிக்கொண்டு அதில் இறங்கினாள்.
காய்ந்த விறகில் பற்றி எரிந்த அந்தத் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்தியிருந்த ஆடையிலும் தீ பற்றவில்லை. அவள் மேனியில் இருந்த சந்தனம், கூந்தலில் சூடியிருந்த பூ ஆகியனவும் மாறாமல் இருந்தன. தீ தாமரை போலவும், ஆதிரை தாமரையில் நிற்கும் திருமகள் போலவும் காணப்பட்டன.
தீயும் என்னை ஏற்றுக்கொள்ளாத அளவுக்குத் தீவினை செய்தவள் ஆகிவின்னேனே என்று சொல்லிக்கொண்டு அழுதாள்.
ஆதிரைக்கு அசரீரி வாக்கு கேட்டது.
உன் கணவன் பிழைத்துப்போய் அம்மணமாக நடமாடும் நாகர் மக்கள் வாழும் மலையை அடைந்திருக்கிறான். பல ஆண்டுகள் அங்குத் தங்கியிருக்க மாட்டான். சந்திர தத்தன் என்னும் வணிவனின் கப்பலில் வந்து சேர்வான். - என்பது அந்த அசரீரி வாக்கு.
ஆதிரை அழுகைத் துயரம் நீங்கி, பொய்கையில் நீராடிவிட்டு வருபவள் போல இல்லம் வந்தடைந்தாள். கண்மணி போன்ற என் கணவன் விரைந்து வந்து சேரவேண்டும் என்று புண்ணியச் செயல்கள் பல செய்தாள். இதனைப் பார்த்து, மழை பொழியச் செய்யும் கற்பினை உடைய பத்தினிப் பெண்டிரும் இவளைத் தொழுதனர்.
ஆதிரையின் கணவன் நாகமலையின் மர நிழல் ஒன்றில் கடலில் ஒடிமரம் பற்றி நீந்தி வந்த களைப்பால் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அப்போது அந்த மலையில் அம்மணமாகத் திரியும் நக்க சாரணர் சிலர் இவன் தனியே வந்திருக்கிறான். வருந்தி உறங்குகிறான். நன்றாகக் கொழுத்திருக்கும் இவன் உடம்பு நமக்கு நல்ல உணவாகும் என்று சொல்லிக்கொண்டு எழுப்பினர்.
சாதுவன் நாகர்களின் மொழியை நன்றாகக் கற்றவன். ஆதலால் கொடுந்தொழில் புரியும் அவர்களைத் தொழுது கொல்லவேண்டாமென்று வேண்டிக்கொண்டான். அதனைக் கேட்ட நாகர்கள் தம் குருமகனிடம் வருமாறு அழைத்துச் சென்றனர்.
காய்ச்சிய கள், மிகுந்த முடைநாற்றக் கவிச்சல், ஊனைத் தின்ற பின் குவிந்து கிடக்கும் வெள்ளெலும்புகள் ஆகியவற்றுக்கு இடையே, கரடி ஒன்று தன் பெண் கரடியுடன் வீற்றிருப்பது போல நாகர்களின் குரு வீற்றிருந்தான். அவனோடு சாதுவன் அவர்களின் மொழியில் பேசி அவர்களைக் கவர்ந்தான். பின்னர் குளிர்ந்த மரநிழலில் அனைவரும் வீற்றிருந்தனர்.
"இங்கு வந்த காரணம் என்ன" என்று குரு சாதுவனை வினவினான். சாதுவன் கடலில் தனக்கு நேர்ந்த துன்பத்தை எடுத்துரைத்தான். அதனைக் கேட்ட குரு பெரிதும் அவன்மீது இரக்கம் கொண்டு, தம் மக்களை அழைத்து "இவன் பெரிதும் வருத்தத்துடன் இருக்கிறான், ஆதலின் இந்த நம்பிக்கு, ஓர் இளம் பெண்ணையும், சூடான கள்ளும், உணவும் வேண்டுமளவுக்குத் தாருங்கள்" என்று கூறினான்.
அந்தச் சொற்களைக் கேட்ட சாதுவன், "விரும்பிச் சொன்ன உரையைக் கேட்டேன். அவற்றை நான் விரும்பவில்லை" என்றான். "பெண்ணும் உணவும் இல்லாமல் உலகிலுள்ள மக்கள் அடையும் பயன் வேறு உண்டோ, இருப்பின் சொல்வாயாக" என்று சினத்துடன் கூறினான்.
சாதுவன் நாகர் குருவிடம் விளக்கமாக் கூறுகிறான்.
மயக்கம் தரும் கள் உண்பதையும், வாழும் உயிர்களைக் கொல்வதையும் தெளிவு பெற்ற பெருமக்கள் விலக்கியிருக்கின்றனர்.
மேலும் கேள்.
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் உறங்குவதும் விழிப்பதும் போன்றவை.
நல்லறம் செய்வோர் நல்லுலகை அடைவர். அறம் அல்லாதனவற்றைச் செய்பவர் துன்பம் தரும் நரக உலகினை அடைவர்.
இந்த உ்மையை உணர்ந்து உள்ளத்தில் உரம் பெற்றவர் அறமல்லாத நெறிகளைக் கைவிட்டு வாழ்கின்றனர். இதனை கண்டுகொள்ளுக என்று சாதுவன் கூறினான்.
இதனைக் கேட்ட நாகர் குரு சிரித்தான்.
உடம்பை விட்டு ஓடும் உயிர் ஒரு உருவத்தைப் பற்றிக்கொண்டு ஓர் இடத்தில் வாழும் என்று எனக்கு இங்குச் சொல்கிறாய். அந்த உயிர் எவ்வாறு அங்குப் போய்ப் புகும்? தெளிவாக எடுத்து எனக்குச் சொல் என்று நாகர் குரு கேட்டான்.
"சினம் இல்லாமல் கேள்" என்று வேண்டிக்கொண்டு சாதுவன் விளக்குகிறான்.
உன் உடலில் உயிர் வாழும்போது, உனக்கு நேர்வதை எல்லாம் உன் உடல் உணர்ந்துகொள்ளும். மற்றும் அந்த உடம்பே உயிர் போய்விட்டால் நெருப்பிலிட்டுச் சுட்டாலும் அதனை உணராது. இதனால் உடம்பை விட்டு ஒன்று போய்விட்டது என்பதை நீ உணர்ந்துகொள்.
இங்கிருந்து போனது எதுவாயினும், எங்காவது இருக்கும் என்பதை நானா சொல்ல வேண்டும்? எல்லாருக்கும் தெரியுமே.
உடம்பு இங்கே இருக்கும்போது உணர்வு என்னும் உயிர் பல தூரம் கடந்து செல்வதை நீ உன் கனவிலும் காணலாம்.
ஒருவர் இறந்த பின்னர் அப்படிச் செல்லும் உயிர் வேறொரு உடம்பில் புகுந்துகொள்ளும் என்பதை நீ புரிந்துகொள்.
இவ்வாறு சாதுவன் கூறிய மொழிகளைக் கேட்ட நாகன் கள்ளுண்ட சிவந்த கண்களுடன் அவனை நோக்கி மேலும் வினவலானான்.
நல்லனவற்றை அறிந்த செட்டியின் காலடியில் விழுந்து நாகன் (நாகர் குரு, நாகர் தலைவன்) வினவலானான்.
கள்ளும், ஊனும் உண்ணுதலைக் கைவிடின் என்னால் உயிர் வாழ இயலாது. எனவே எனக்கு உகந்த வகையில் நல்ல அறநெறியை எடுத்துரைக்க வேண்டும் - என்று கேட்டுக்கொண்டான்.
சாதுவன் சொல்கிறான். - நன்று சொன்னாய். இனி நீ நல்ல நெறியில் செல்வாயாக. உன்னால் செய்ய இயலக்கூடிய அறநெறியைச் சொல்கிறேன்.
பாய்மரக் கப்பல் உடைந்து இங்கு வரும் மக்களை அடித்துத் தின்னும் பழக்கத்தைக் கைவிட்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
மூப்பால் இறந்து கிடக்கும் விலங்குகளைத் தின்னலாம். பிற உயிர்களைக் கொல்லும் தீய செயலை விட்டொழிக்க வேண்டும்.
இப்படிச் சொல்லக் கேட்ட சிறுமை குணமுடைய நாகன் கூறுகிறான். - இங்கே என்னால் செய்ய முடிந்த இந்த நல்லனவற்றைச் நான் செய்கிறேன். அங்கு உனக்குப் பயன்படும் பொருகளைத் தருகிறேன். பெற்றுக்கொள். - என்று கூறினான்.
முன்பெல்லாம் கப்பல் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று தின்றோம் . அவர்களிடம் கைப்பற்றிய ஏராளமான பொருள்கள் இங்கு உள்ளன. மணம் மிக்க மரங்கள், மெல்லிய ஆடைகள், விழுமிய பணப்பொருள் முதலானவை அந்தச் செல்வங்கள் பலவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.
அவற்றை எடுத்துக்கொண்டு வந்து சந்திர தத்தன் என்பவனின் கப்பலில் ஏறிப் புகார் நகருக்குத் திரும்பினான். தன் மனைவி ஆதிரையுடன் சேர்ந்து நல்ல பல தானங்கள் செய்து வாழ்ந்து வருகிறான்.
காயசண்டிகை கூறிய ஆதிரை இப்படிப்பட்டவள். அப்படிப்பட்டவள் கையால், பெண்ணே, பிச்சை பெறுக என்று அறவண அடிகள் கூறினார்.
மணிமேகலை ஆதிரை மனைக்குச் சென்று முழுமை செய்யப்படாத ஓவியம் போல நின்றாள்.
ஆதிரை மணிமேகலையைத் தொழுது வலமாகச் சுற்றிவந்து மணிமேகலை கையிலிருந்த அமுதசுரபி பாத்திரம் நிறையும்படி, இந்த உலகம் முழுவதும் பசிப்பிணியிலிருந்து நீங்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்தி உயிரைக் காக்கும் மருந்தாகிய உணவினை இட்டாள்.
Comments
Post a Comment