- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
காலக் கணிதம் – கண்ணதாசன்(sem-1)
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
திரண்ட கருத்து:
கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.கவிஞனாகிய நானே அனைத்தின் தொடக்கம் ஆவேன். நானே முடிவும் ஆவேன். நான் சொல்வது தான் நாட்டினுடைய சட்டம் ஆகும்.
உள்ளம் கவர்ந்த தொடர்களை
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!”
– என்பதிலிருந்து பணமோ, பதவியோ தன்னை ஒருபோதும் அடிமைப்படுத்த இயலாது என்பதற்குச் சான்றாக அமைகிறது.
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’
-தன்னை ஒருவர் புகழ்வதினால் பெருமகிழ்ச்சியடைவதோ, இகழ்வதினால் மனம் வருந்துவதோ இல்லை என்பது பண்பட்ட மனத்திற்குச் சான்றாகிறது
‘எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!’
– நல்லது எது கெட்டது எது என்பதறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவதற்குச் சான்றாகிறது.
உரை:
- கவிஞன் நான் ஓர் காலக்கணிதம் கருவாகிய பொருளை உருப்பட வைப்பேன். பூமியில் புகழுக்கு உரிய தெய்வம் நான்.
- பொன்னைவிட உயர்ந்தது என் செல்வம். ஒரு செயல் சரி என்றால் எடுத்துச் சொல்வேன்; தவறு என்றால் எதிர்ப்பேன். அதுதான் என் வேலை.
- முத்தொழில் நானும் அவனும் மட்டுமே அறிந்தது. செல்வர் வாளில் சிறைப்பட மாட்டேன். பதவி வாளுக்குப் பயப்பட மாட்டேன். அன்பும், விருப்பமும் மிகுந்து ஆசை தருவதை விரும்புவேன்.
- என்னிடம் உண்டு என்றால், பிறர் உண்ணத் தருவேன். இல்லை என்றால் பிறர் இல்லம் தட்டுவேன். வண்டு போல மாறி மலரில் அமர்ந்து, குடித்த தேனை ஊர்ப்புறம் தருவேன்.
- கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத கருத்துகளைச் சொல்லிட முயற்சிப்பேன். என்னுடல் புகழ்ந்தால் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
- என் கவிதை வாக்குமூலம் அதை வைத்து இறந்த பிறகு தீர்ப்பை எழுதுங்கள். கல், மரம், விலங்காக மாற நான் காட்டு விலங்கு கிடையாது.
- மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். நன்மை, தீமை அறிந்து ஏற்கும் என் சாலை.
- தலைவர் மாறுவார்கள், தர்பார் மாறும், தத்துவம் மட்டும் குறையாத அட்சயப் பாத்திரம் ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்ளட்டும். குரைப்போர் குரைக்கட்டும்.
- வாய்ச்சொற்கள் உடம்பினைத் தொடாது. நானே தொடக்கம் நானே முடிவு. நான் சொல்வதுதான் நாட்டின் சட்டம்.
Comments
Post a Comment