திருக்குறள் -நீத்தார் பெருமை

 திருக்குறள் 

நீத்தார் பெருமை- அதிகாரம்-3


குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 

வேண்டும் பனுவல் துணிவு.

குறள் விளக்கம்:

மற்ற உயிர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களின் ஆசைகள் எல்லாவற்றையும் துறந்து வாழ்வதையே ஒழுக்கமாக கொண்ட துறவிகளை நாம் பாராட்டி பெருமைப்படுத்தி எழுதுவதே நூலின் தகுதியாகும்.


குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

குறள் விளக்கம்:

உலகத்தில் இதுவரைக்கும் பிறந்து இறந்து போன மனிதர்களின் அளவை எப்படி நம்மால் கணக்கிட முடியாதோ, அதுபோலவே மற்றவர்களுக்காக வாழ்வோரின் பெருமையை நம்மால் அளவிட்டுச் சொல்ல முடியாது.


குறள் 23:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 

பெருமை பிறங்கிற்று உலகு.

குறள் விளக்கம்:

நல்லது கெட்டது அனைத்தையும் தெளிவாக தெரிந்து நன்மை செய்வதையே தங்கள் முழு குறிக்கோளாக கொண்ட துறவிகளின் பெருமையே உண்மையான பெருமையாக விளங்குகிறது.


குறள் 24:

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் 

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

குறள் விளக்கம்:

பல வழிகளில் வரும் அடக்க முடியாத ஆசைகளை தங்கள் தெளிவான அறிவினால் அடக்கி, மன வலிமையுடன் வாழ்ந்துவரும் பெரியவர்கள் தெய்வ நிலையில் வைத்து வணங்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். 


குறள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் 

இந்திரனே சாலும் கரி.

குறள் விளக்கம்:

தேவர்களுக்கெல்லாம் தலைவனான இந்திரன் ஆசைகளை அடக்க முடியாத காரணத்தால் ஒரு முனிவரால் சபிக்கப்பட்டார். இதுவே ஆசைகளை அடக்கிய  துறவிகளின் வலிமைக்கு சாட்சியாகும்.


குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

குறள் விளக்கம்:

தங்கள் மனதின் வலிமையால் நினைத்த காரியங்களை எல்லாம் செய்து முடிப்பவர்கள் பெரியவர்கள். அப்படி செய்ய முடியாதவர்கள் சிறியவர்கள்.


குறள் 27: 

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் 

வகைதெரிவான் கண்ணே உலகு.

குறள் விளக்கம்:

உடல் உணர்வு, வாய் உணர்வு, கண் உணர்வு, மூக்கு உணர்வு, காது உணர்வு என்னும் இந்த ஐந்து  உணர்வுகளும் நம் மனதை கெடுக்கக் கூடியவை.  இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வலிமை உடைய பெரியோருக்கு உலக மக்களெல்லாம் கட்டுப்படுவர்.


குறள் 28: 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

குறள் விளக்கம்:

பெரியோர்களின் சொற்கள் நமக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது என்பதற்கு சாட்சியாக அவர்கள் மூலம் நமக்கு அருளப்பட்ட புனித நூல்களின் வசனங்கள் விளக்குகின்றன.


குறள் 29:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது.

குறள் விளக்கம்:

மற்றவர்களுக்கு நல்லது செய்வதையே தங்கள் குணமாக கொண்டு வணங்க தகுதி வாய்ந்தவர்களாக வாழும் பெரியோர்களின் மனம் புண்பட்டால், வேதனையில் அவர்களின் சொல் தடுக்க முடியாதபடி அதன் பலனை கொடுத்துவிடும்.


குறள் 30: 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 

செந்தண்மை பூண்டொழுக லான்.

குறள் விளக்கம்:

உலகில் உள்ள எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமல் அருள் உணர்வுடன் நடந்து கொள்வதே அற உணர்வு என்றால், நன்மை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் எல்லோருமே அந்தணர்கள் ஆவார்கள்.


-திருவள்ளுவர்

Comments