மகாகவி பாரதியார்- கண்ணன் - என் காதலன்

 மகாகவி பாரதியார்- கண்ணன் - என் காதலன் (sem-1)


தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே

     சுடர் விளக்கினைப் போல்,

நீண்ட பொழுதாக - எனது

    நெஞ்சந் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை

     கொண்டு மிகவும் நொந்தேன்;

வேண்டும் பொருளை யெல்லாம் - மனது

     வெறுத்து விட்டதடீ! .


தூண்டிலில் மாட்டிய புழு வலியால் எப்படித் துடிக்கும்; கோயிலின் கருவறையில் உள்ள விளக்கைப் போல அல்லாமல் வெளியே வைக்கப்பட்டிருக்கும் சுடர் விளக்கினைப் போல நீண்ட நேரமாக எனது நெஞ்சம் உன் பிரிவால் துடிக்கிறது. வானத்தில் சுதந்திரமாகப் பறந்து மகிழ்ச்சியடைய முடியாமல் கூண்டில் அடைபட்டிக் கிடக்கும் கிளியைப் போல தனிமையில் மிகவும் வேதனைப் படுகிறேன். தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகள் பார்ப்பதில்லை; ஐபிஎல் கிரிக்கெட் ரோஹித் ஷர்மா ஆடினாலும் பார்ப்பதில்லை; நான் தின்னாமல் டைனிங் டேபிளில் முந்திரி அப்படியே இருக்கிறது; எல்லாம் வெறுத்துவிட்டதடீ தோழி, வெறுத்துவிட்டது.


பாயின் மிசை நானும் - தனியே

     படுத் திருக்கை யிலே,

தாயினைக் கண்டாலும் - சகியே!

     சலிப்பு வந்த தடீ!

வாயினில் வந்ததெல்லாம் - சகியே!

     வளர்த்துப் பேசிடுவீர்;

நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!

     நுங்கள் உறவை எல்லாம். 

மெத்தையில் படுத்திருக்கிறேன். என் தாய் வருகிறாள். என் முதுகை வாஞ்சையோடு தடவுகிறாள். எனக்குத் தோசைக் கரண்டியால் சூடுபோட்டது போல இருக்கிறது. நான் தாயை “போ, போ” என விரட்டுகிறேன். உன்னோடு இருக்கும்போது என்னவெல்லாமோ பேசுவாயே. யாராவது என்ன பேசினீர்கள் எனக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் , எனப் பதில் சொல்வேன்?. நோய் வந்தது போல தனிமை ஆயிற்றே நான் என்ன செய்வேன்?

உணவு செல்லவில்லை; - சகியே!

    உறக்கங் கொள்ளவில்லை.

மணம் விரும்பவில்லை; - சகியே!

    மலர் பிடிக்க வில்லை;

குண முறுதி யில்லை; - எதிலும்

    குழப்பம் வந்த தடீ!

கணமும் உளத்திலே - சுகமே

    காணக் கிடைத்ததில்லை. 


 சாப்பிட முடியவில்லை; தூக்கம் வரவில்லை; பூஜை அறையில் கொளுத்தி வைத்திருக்கும் சாம்பிராணி வாசனை கூட சகிக்கவில்லை; பூவின் வாசனை பிடிக்க வில்லை. எல்லாவற்றிலும் குழப்பம்; என் குணம் என்ன? எனக்கே புரியவில்லை.ஒரு கணம் கூட நிம்மதியில்லை.உள்ளமும் கனமாக இருந்ததடி.

பாலுங் கசந்ததடீ! - சகியே!

     படுக்கை நொந்த தடீ!

கோலக் கிளிமொழியும் - செவியில்

     குத்த லெடுத்த தடீ!

நாலு வயித்தியரும் - இனிமேல்

     நம்புதற் கில்லை யென்றார்;

பாலத்துச் சோசியனும் - கிரகம்

     படுத்தும் என்று விட்டான். 


பால் கசக்கிறது; படுக்கை முள்ளாய் குத்துகிறது; அன்பாய் வளர்த்த கிளியின் கிள்ளைமொழி என்னுடைய காதுகளை ஈட்டியாய் குத்திக் கிழிக்கிறது. என் நிலையைப் பார்த்த என் தாய் என்னை ஒன்றுக்கு நாலாய் வைத்தியர்களிடம் கொண்டு காட்டினாள். அவர்கள் இனி நம்புவதற்கில்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்த ஜோசியனோ, ராகு படுத்துகிறது எனச் சொல்லிவிட்டான்.

கனவு கண்டதிலே - ஒருநாள்

     கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்க வில்லை - எவனோ

     என்னகந் தொட்டு விட்டான்.

வினவக் கண்விழித்தேன்; - சகியே!

     மேனி மறைந்து விட்டான்;

மனதில் மட்டிலுமே - புதிதோர்

     மகிழ்ச்சி கண்டதடீ! 

ஒரு நாள் இரவு நான் ஒரு கனவு கண்டேன். ஆனால் எதும் புரியவில்லை. யாரோ என் உள்ளத்தைத் தொட்டது போன்ற ஒரு உணர்வு. யார் எனக் கேட்க கண் விழித்தேன். ஆனால் அவனைக் காணவில்லை. ஆனால் என் மனதில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.


உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!

    உடம்பு நேராச்சு,

மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்

    மனத்துக் கொத்தடீ!

இச்சை பிறந்ததடீ! - எதிலும்

    இன்பம் விளைளந்ததடீ!

அச்ச மொழிந்ததடீ! - சகியே!

    அழகு வந்ததடீ! 

அதுவரை கொதித்துக் கொண்டிருந்த என் தலை திடீரெனக் குளிர்ந்தது. வீடு, மாடி, தோட்டம், திண்ணை எல்லாம் உடனே பிடித்துப் போனது. வாழ்க்கையின் மீது ஆசை வந்தது, எதைப் பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க்கையின் மீதிருந்த பயம் போனது. எனகே ஒரு அழகு வந்ததடி என் தோழி.

எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை

     இட்ட விடத்தினிலே!

தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்

     சாந்தி பிறந்ததடீ!

எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்

     யாரெனச் சிந்தை செய்தேன்;

கண்ணன் திருவுருவம் - அங்ஙனே

     கண்ணின் முன் நின்றதடீ! 

அவன் என் உள்ளத்தைத் தொட்டான் எனச் சொன்னேன் அல்லவா? அதனால் என் உள்ளம் குளிர்ந்ததடி. ஒரு புதிய அமைதி பிறந்தது. அதனால் வந்தவன் யாரென்று எண்ணி எண்ணிப் பார்தேன். வந்தவன் கண்ணன். அவன் திரூருவம் என் முன்னே நின்றதடீ.

Comments