- Get link
- X
- Other Apps
பழமொழி நானூறு
ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.
கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர்களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும் அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அங்ஙனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியது இல்லை அல்லவா!கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது பழமொழி. ஆற்றுணா - வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம். எனவே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம்.
உரை முடிவு காணான்; இளமையோன்!’ என்ற
நரை முது மக்கள் உவப்ப, நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை
கல்லாமல் பாகம் படும்.
உரை - சொல். இருதிறத்தாரும் உரைத்தலின் உரை, வழக்கு எனப்பட்டது. குற்றமுடையாராய்த் தண்டிக்கப்பட்டோரும்,அரசன் வழக்கினை ஆராய்ந்து நீதி கூறி அறிவு
கொளுத்தும் முறையைக் கண்டு, மனச் செம்மை யுடையராய் மகிழ்வெய்துவார்கள் என்பார், 'நரைமுதுமக்கள் (இருவரும்) உவப்ப முறைசெய்தான்' என்றார். சாட்சிகள் முதலிய பிற காரணங்கள் கொண்டு ஒரு வழக்கினை முடிவு செய்தலினும் வழக்குடையோர் சொற்களைக் கொண்டே தீர்ப்புக் கூறுதல் மிகவும் நுண்ணுணர்விற்று. முறைசெய்தல் - ஒருபாற் கோடாது கோல் ஓச்சுதல்.
அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'.
அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ஙனமாகும்; பொலிவு பெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும் ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன அல்லவா?ஆடையின் மேல் அவ்வணிகளையும் அணியின் அழகு தரும். அதுபோல, அறிவுடைமையின் மேல் பிற செல்வங்களும் சேரின் பயன் தரும். இன்றேல் தருவதில்லை. 'அணியெல்லாம் ஆடையின் பின்' என்பது பழமொழி. ஆடையே முதன்மையானது என்பது கருத்து.
பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ?-நிரந்து எழுந்த
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்!-விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.
பாசியை உவமை கூறலின் மிக்க படிற்றுரைகளை இடைவிடாது உரைப்பர் என்பது பெறப்பட்டது. அவர்மேல் பழித்தற்குரியன இல்லை யென்பார் இட்டுக் கூறினார் என்றார். 'ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை' - இஃது இச்செய்யுளில்,வந்த பழமொழி.
Comments
Post a Comment