- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
கும்பகர்ண வதைப் படலம்
கும்பகர்ணனை எழுப்பி அவனைப் போருக்கு அனுப்பலாம் என்று எண்ணி, ஏவலர்களை அழைத்து 'விரைந்து சென்று கும்பகர்ணனை இவ்விடம் வருமாறு அழைத்து வாருங்கள்' என்று கட்டளையிட்டான் இலங்கை வேந்தன் இராவணன். ஏவலர்கள் நால்வர் காலனின் தூதர்களைப் போல கும்பகர்ணன் மாளிகையைச் சென்றடைந்தனர்.
காவலர் எழுப்புதல்
தம் கையிலிருந்த எழுவினாலும் உலக்கையினாலும் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். "உறங்குகின்ற கும்பகன்ன! உன்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றது. எழுந்திராய்! எழுந்திராய்! காற்றாடி போல் எங்கும் நிறைந்த வில்பிடித்த கால தூதர் கையிலே உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்" எனப் பலவாறு கூறினர். பின்னர் இராவணனிடம் சென்று என்ன முயன்றும் கும்பகர்ணனை உறக்கத்தினின்றும் எழுப்ப முடியவில்லை என்று சொல்ல, ஒன்றன் மேல் ஒன்றாக யானைகளையும், யாளிகளையும் விட்டு மிதிக்கச் செய்து எழுப்புங்கள் என்று ஆணையிட்டான். அப்படி யானைகளும், யாளிகளும் மிதித்த போதும் உறக்கத்திலிருந்து கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் இரு கன்னங்களிலும் உலக்கையால் அடிக்க, இறந்தவன் எழுந்ததைப் போல கும்பகர்ணன் புரண்டு படுத்து துயில் நீங்கி எழுந்து அமர்ந்தான்.
கும்பகர்ணன் எழுதல்
கும்பகர்ணன் எழுந்ததும் மூவகை உலகங்களும் அஞ்சி நடுங்கின; எதிர் எதிர் திசையில் உள்ள எட்டு யானைகளும் தங்களுக்கு உரிய திசைகளில் இருந்து நிலை மாறின; சூரியன் அஞ்சினான்; தாமரையில் அமர்ந்த பிரமனும், பாற்கடலிற் பள்ளி கொண்டுள்ள திருமாலும், கயிலை மலையில் உள்ள ஆகிய மூவரை முதலாகக் கொண்ட பிற தேவர்களும் பிறரும் நடுங்கினர்
இராணவன் அழைத்த செய்தியைக் கேட்ட கும்பகர்ணன் இராவணனது அரண்மனையைச் சென்றடைந்து, அண்ணன் இராவணனை நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். வணங்கிய தம்பியைத் தோளோடு தழுவினான் இராவணன். நிறைய மாமிசங்களை அளித்து, குடம் குடமாகக் கள்ளையும் குடிக்கக் கொடுத்து, நல்ல உடையகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான்.
இராவணன் கும்பகர்ணன் உரையாடல் (கும்பகர்ணன் அறிவுரை)
"இவ்வாறு எனக்குச் சிறப்பு செய்வதெல்லாம் எதற்காக" என்றான் கும்பகர்ணன். அதற்கு இராவணன், "மானுடர் இருவர், பெரிய குரங்குப் படையோடு, இலங்கையைச் சூழ்ந்து கொண்டு என்னையும் வெற்றி கொண்டார்கள். நீ போய் அவர்களது உயிரைப் பறிக்கும் தொழிலை நிறைவேற்ற வேண்டும்" என்றான்.
திகைத்த கும்பகர்ணன் இராவணனுக்கு உரைத்த பதிலாவது :
- போர் வந்து விட்டதோ? எல்லையற்ற கற்புடைய சீதாதேவியின் துயர் இன்னமும் தீரவில்லையோ? தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ?
- திருமகளாம் சீதையின் காரணமாக போர் வந்து விட்டதோ? திட்டி விஷம் (கண்ணில் நஞ்சுள்ள பாம்பு) போன்ற சீதாதேவியைக் கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விடு என்று நான் மந்திராலோசனையின் போது சொன்னேனே, கேட்கவில்லையோ? எல்லாம் விதியின் செயல்.
- · இந்தப் போரின் காரணமாக இழந்த நாட்டை இந்திரன் மீண்டும் பெறப் போகிறான். உன் பரந்த உறவினர்களையும், நண்பர்களையும் அழிக்கப் போகிறாய். நீயும் அழியப் போகிறாய். சிறையில் அடைபட்ட தேவர்களை விடுவிக்கப் போகிறாய். தீவினையிலிருந்து விடுபட உனக்கு இனி ஒரு மார்க்கமும் இல்லை.
- நீ கூறும் அந்த மானுடர்களின் எண்ணமும், சொல்லும், செயலும், சரண் அடைந்தோரைக் காக்கும் குணமும், அறவழியைச் சேர்ந்தவை. மாறாக வஞ்சனையும், பாவமும், பொய்யும் மேற்கொண்ட நாம் பிழைத்தல் என்பது முடியுமா?
- அவர்களது அறநிலைக்கு அழிவு ஏது? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். தலைவனே! உனக்கு நான் இறுதியாகச் சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு. அதை நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வாயேல் நல்லது. இல்லையேல் நீ இறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை
- கரிய கடலைத் தன் காலாலே கடந்து வந்த குரங்கு நம் பகைவர்க்குத் துணையாக இருக்கிறது. சீதையும், சிறையிலேயே சிந்தை துவண்டு கிடக்கிறாள். வாலியின் மார்பைத் துளைத்த அம்பும் இராமனின் அம்பறாத் தூணியில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்!".
- சீதையைக் கொண்டு போய் விட்டுவிட்டு இராமனின் சரணம் தாழ்ந்து, உன் தம்பி வீடணனை அன்பு செலுத்தி அழைத்துக் கொண்டு வந்து வாழ்வாயேல் நன்று. அப்படி இல்லையென்றால், நீ பிழைக்க மற்றொரு வழி உள்ளது.
- படைகளைச் சிறிது சிறிதாக போருக்கு அனுப்பாமல், அனைத்துப் படைகளையும் ஒன்று திரட்டி, போருக்கு அனுப்புதலே நல்லது. அதையாவது செய்து உயிர் வாழ முயற்சி செய்! என்றான் கும்பகர்ணன்.
இதைக் கேட்ட இராவணன் சினத்துடன் பொங்கி எழுந்தான். கும்பகர்ணனை நோக்கி அவன் வெகுண்டு கூறியதாவன:
- இனி என்ன நிகழப்போகிறது என்றறிய உன்னை அழைக்கவில்லை. எனக்கு அறிவுரை கூற நீ எனக்கு அமைச்சனும் அல்ல. பகைவர்களிடம் அஞ்சும் உனது வீரம் மிக அழகானது.
- வீரம் வெளிப்படும் போருக்குச் செல்ல உனக்கு இனி தகுதியில்லை. மாமிசத்தையும் கள்ளையும் உண்டு விட்டு போய்க் கிடந்து உறங்கு!" என்று கும்பர்ணன் மனம் வருந்த கூறினான் இராவணன்.
- இரண்டு மானிடரை வணங்கியும் கூனுடைய குரங்கைக் கும்பிட்டும் உயிர் வாழ்வது உனக்கும் உன் தம்பி வீடணனுக்கும் மட்டுமே உரிய செயலாகும். என்னால் அது இயலாது. எனவே இங்கிருந்து எழுந்து போ என்றான்.
- கும்பகர்ணனை அனுப்பிவிட்டு இராவணன் ஏவலாளர்களை அழைத்து "என் தேரையும், ஆயுதங்களையும் கொணர்க! போருக்கு நானே வருகிறேன் என்று அந்த இரு மானுடச் சிறுவர்களுக்கும் சொல்லி என் முன் வரச் சொல்க!" என்றான்.
கும்பகர்ணன் அண்ணனைப் பணிந்து "நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்!" என்று சொல்லித் தன் பெரிய சூலத்தைத் தனது வலக் கரத்தில் ஏந்திக் கொண்டு "இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது, கேட்பாயாக!" என்று பின்வருவனவற்றைச் சொன்னான்.
- "தலைவனே! நானே போருக்குப் போகிறேன். போய் அவர்களோடு போரிட்டு வென்று திரும்பி வருவேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஊழ்வினை என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. ஆகையால், போரில் நான் இறப்பேன். அங்ஙனம் நான் இறப்பேனானால், சீதையை உன் நன்மை கருதி விட்டுவிடுதல் நன்று.
- அரசே! இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முன்னை நாள் முதல் இந்நாள் வரைக்கும் யான் செய்த குற்றங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வாயாக! இனி உன்னைக் காணும் பேறு எனக்கு இல்லை. தலைவனே! உன்னிடம் விடை பெற்றுக் கொள்கிறேன்.எனக் கூறி விடைப்பெற்றான்.
கும்பகர்ணனைக் கண்ட இராமர் படை
ஆதிசேடனின் தலையிலிருந்து நழுவி பிற மலைகளுக்கு வேந்தனாக விளங்கும் மேரு மலை போல கும்பகர்ணன் தங்கத் தேரில் காணப்பட்டான்.இவனது தோற்றத்தையும், வீரத்தையும் பார்த்து வியந்த இராமன், அருகிலிருந்த வீடணனிடம் , இவன் ஒரு தோளிலிருந்து மற்றோர் தோள் வரை பார்க்க பல நாட்கள் ஆகும். உலகத்தின் நடுவில் உள்ள மேருமலைக்குக் கால் முளைத்தது போல வரும் இவன் யார்? என வினவினான். அதற்கு வீடணன் கூறியவை
- அண்ணலே! இவன் இலங்கை வேந்தன் இராவணனுக்குப் பின் பிறந்தவன், அடியேனுக்கு மூத்தவன். காலனையொத்த, சூலத்தைக் கையிலேந்திய கும்பகர்ணன்.
- மேலும் இவன் அற வாழ்வை மேற்கொள்ளாத இராவணனின் ஒப்பற்ற தம்பி. ஊழிக்காலமளவும் உறங்கும் வரத்தைப் பெற்றவன்.
- உடல் வலிமை, மன உறுதி ஆகியவற்றோடு உயர்வான தவம் செய்து வானளவான வரங்களைப் பெற்றவன்.
- போர்க்களத்தில் இவன் திரிந்த போது காற்றாடியைப் போல கணக்கற்ற பல உயிர்களை மாய்த்தவன். இதுவரை இவன் உறங்கியதால் மட்டுமே உலகம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
- இவன் தனது அண்ணன் இராவணனிடம் சீதையைச் சிறை எடுத்து வந்தது தவறு, இந்தச் செய்கையால் நமக்கு அழிவு உண்டாகும் என்று ஒருமுறைக்கு இரண்டு முறையாக எடுத்துரைத்தான்.
- அதை ஏற்காத அண்ணனைக் கடிந்தும் பேசினான். இவனது அறிவுரைகளை ஏற்காத இராவணன் இகழ்ந்ததால் தான் இறப்பது உறுதி என அறிந்தும் இங்கு வந்துள்ளான். ,
இப்படி வீடணன் சொல்லவும், அருகிலிருந்த சுக்ரீவன், இராமனை நோக்கி, "இவனைக் கொல்வதால் என்ன பயன்? இவனை நம்மோடு சேர்த்துக் கொண்டால், வீடணனும் தன் தமையனை இழக்க மாட்டான். நமக்கும் இது நன்மை பயக்கும்" என்றான். அதற்கு இணங்கிய இராமன் தூது செல்வது யார் என வினவினான் "தாங்கள் அனுமதி அளித்தால் அடியேன் சென்று கும்பகர்ணனிடம் எடுத்துச் சொல்லி அவனை நம்முடன் சேரும்படி அழைத்து வருகிறேன்" என்றான் வீடணன் . "நல்லது போய் வா!" என்று வீடணனை அனுப்பி வைத்தான் இராமன்.
கும்பகர்ணனும் வீடணனும்
கும்பகர்ணனும் வீடணனும் உடனே அங்கிருந்து புறப்பட்ட வீடணன், வழியில் கடல் போல நிறைந்திருந்த வானர சேனைகளையெல்லாம் கடந்து கும்பகர்ணன் இருக்கும் இடம் சென்றான். அங்குச் சென்று அண்ணன் கும்பகர்ணனை வணங்கினான். கண்களில் நீர் வழியத் தன் எதிரே வந்து வணங்கிய தம்பியைத் தாங்கி அணைத்து ஆரத் தழுவி அவன் கூறியன:
- தவங்களைச் செய்து, ஒழுக்கம், தர்மம், இவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறாய். பிரம தேவன் உனக்கு அழிவு இல்லாத ஆயுளைக் கொடுத்திருக்கிறான். அப்படியிருந்தும் நீ பிறந்த குலத்தின் தன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்!
- எங்களைக் கொல்ல இராமன் நாண் ஏற்றிய வில்லோடு நிற்கிறான். இலக்குவன் அவனுக்குத் துணையாக நிற்கிறான். படை வீரர்கள் காத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள். எமனும் எங்கள் உயிரைக் கொண்டு போக தயாராக வந்திருக்கிறான். விதியும் காத்துக் கொண்டு நிற்கிறது. அழியப் போகும் எங்களிடம் உன் ஆற்றல் எல்லாம் தொலையும்படி ஏனப்பா இங்கு வந்து சேர்ந்தாய்?"
- "வீடணா! இராமனிடம், இராமனின் கணைக்கு பலியாகப் போகும் அரக்கர் கூட்டத்துக்கு, உன் கையால் எள்ளும் நீரும் சொரிந்து பிதுர் கடன்களைச் செய்ய முடியும். அதற்கு உன்னை அன்றி வேறு யார் இருக்கிறார்கள்?
- · நீ இலங்கைக்கு வரும் காலம் இப்போது அல்ல. நாங்கள் அனைவரும் போர்க்களத்தில் மாண்ட பிறகு, திருமகள் குடிகொண்டிருக்கும் இராமனோடு, இலங்கைக்கு வந்து ஒப்பற்ற அரச செல்வத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது நீ திரும்ப இராமனிடமே போய்விடு!" என்றான் கும்பகர்ணன்.
வீடணன் உரை
அதற்கு வீடணன் தயங்கியபடியே உரைத்தவையாவன:
- இருண்டு கிடந்த மனமுள்ள எனக்கும் கருணையைப் பொழிந்த இராமன், தாங்களும் அவனுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கும் அருள் புரிவான். உங்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு இறப்பு, பிறப்பு எனும் மாயையிலிருந்து மீட்டுவிடுவான்.
- இராமன் எனக்களித்த இலங்கை அரசு முதலான செல்வங்களையெல்லாம் உங்களிடமே அளித்து விடுகிறேன். உங்களுக்கு ஏவல் செய்யும் பணியையும் ஏற்றுக் கொள்கிறேன்.
- தரும வழியில் வாழ்பவர்கள், தீய செயல்களைச் செய்தால், அன்பிற் சிறந்தவர் என்றோ, உடன் பிறந்தவர் என்றோ, தாய் தந்தை என்றோ எண்ணிப் பார்ப்பதில்லை. தூய்மையான செயல்களைச் செய்யத் துணியும் போது பழிச் செயல் வந்து தொடர்வது உண்டாகுமா?
- ஒருவன் தீய செயலை செய்தால் அதற்காக தீமை செய்யாத சுற்றத்தாரும் இறத்தல் மேன்மை அல்ல. ஆய்ந்த அறிவினை உடையவனே. அறத்திற்காக, தந்தை சொல்லைக் கேட்டு தாயைக் கொன்ற பரசுராமனை நினைத்துக் கொள்.
- உடலில் தோன்றிய ஒரு புண்ணை கத்தியால் அறுத்து, சீழ் நீரை வெளியேற்றி, தீயினைப் போன்ற கார மருந்துகளை வைத்துக் ட்டி, பிறகு வேறோர் மருந்திட்டு துயரம் தீர்ப்பார். அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அல்லாது கடலில் நறுமணப் பொருட்களைத் தேய்த்துக் கழிய விடுவது போன்று நீ இங்கு இருத்தல் பொருத்தமன்று
- தமையனான இராவணனைக் காக்கலாம் என்றால் அதற்கான ஒரு வழியும் இல்லை. அவனுடன் இருந்து தருமத்தை எடுத்துக் கூறவும் வழியில்லை. தேவர்கள் சிரிக்கும் படி நடைபெற உள்ள போரில் உயிரை விடலாம் அல்லது நரகத்தில் புகலாம். இதைத் தவிர வேறொரு செயல் இல்லை.
- இளமை பருவத்தினை வீணாக உறங்கியே கழித்தாய், பெரு வீரனாய் இருந்தும் வெற்றி வாழ்வினை நீ பெறவில்லை. மண்ணில் மதிப்பற்ற தாழ்வில் உள்ளாய். இப்போது அறம் கெடுமாறு உயிரை இராவணனுக்காக விடுவது ஏன்?
- இராமனைச் சேர்ந்தால், பகைவரான முனிவர்கள் கூட உன் மீது கருணை வைப்பர். மூவுலகிலும் உனக்குப் பகை இருக்காது. வெறுப்பு கொண்ட தேவர்களும் துணைவராக மாறுவர். கனி தோன்ளும் காலத்தில் பூக்களைப் பறிப்பதா?
- வேத நாயகனான இராமன் உங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என்பால் உள்ள அன்பாலும், உன்னை அழைத்துக் கொண்டு வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார்.
இவ்வாறு கூறிய வீடணன் கும்பகர்ணனின் காலடியில் வீழ்ந்து பணிந்தான். வீடணன் பேசுவதைக் கண்களில் நீர் சோர கேட்டுக் கொண்டிருந்தான் கும்பகர்ணன், வீழ்ந்து வணங்கிய வீடணனை தோள்களைப் பிடித்துத் தூக்கித் தழுவிக் கொண்டு பேசுகிறான் கும்பகர்ணன்.
- மைந்தனே! நீரின் மேல் எழுதிய எழுத்துப் போல் அழியக்கூடிய செல்வ வாழ்க்கையை விரும்பி இதுவரை எனக்கு ஊனும் கள்ளும் ஊட்டி வளர்த்து, பிறகு போர்க்குரிய ஒப்பனைகளைச் செய்து என்னை போருக்கு அனுப்பிய அண்ணன் இராவணனுக்காக என் உயிரை விடாமல் இராமனிடம் நான் வரமாட்டேன். என் துன்பத்தை நீ நீக்க விரும்பினால், விரைந்து இராமனிடம் போய்விடு.
- பிரமன் அளித்த வரத்தினால், அழிவற்ற அறத்தைப் பெற்றாய். உலகம் உள்ளளவு வாழும் பேறு பெற்றாய். உலகிற்கே தலைவன் நீ. எனவே இராமனைச் சேர்தல் உனக்குப் புகழ். இழிவான இம்மரணம் எனக்குப் புகழ்.
- அறிவற்ற தலைவவன் தீமையைச் செய்ய கருதும்போது அதைத் தடுக்க இயலவில்லை என்றால் அத்தலைவனை எதிர்த்து ஒரு பயனும் இல்லை. அத்தலைவன் தந்த உணவை உண்டதனால் அவனுக்காக போர் செய்து, அவனுக்கு முன்பே இறத்தல் நன்று.
- தேவரும் பிறரும் போற்றும்படி மூவுலகையும் ஆண்டவன் இராவணன். அவன் இராமனது அம்புகளை ஏற்று, படைகளுடனும், உறவினர்களும், தம்பியும் இன்றி மண் மேல் தனித்து இறக்க உரியவனோ?
- செம்பை மதிலாக கொண்ட இலங்கையின் அரசச் செல்வதை நிலையாது எனக் கருதி என் அண்ணனுரைடய உயிரைப் பறிக்கும் இராமனை வாழ்த்திய புண்பட்ட நெஞ்சுடன் இராமனைக் கும்பிட்டு வாழ மாட்டேன்.
- அனுமனை, வாலி மகனான அங்கதனை, ஆரியன் மகனான சுக்கிரீவனை, அழகிய வில்லுடைய இராம இலக்குவர்களை, நீலனை, சாம்பவானை, கனியைத் தொடரும் குரங்குக் கடலைக் கடந்து உலகை மூடும் பனியை விலக்கும் சூரியனைப் போல திரிவதைப் பார்ப்பாய்,
- போர்க்களத்தில் அஞ்சாதவராய் என் எதிரில் வரும் கரிய மலை போன்ற இராமனையும், தங்க மலை போன்ற இலக்குவனையும் பிறரையும் உலகில் உயிர் சுமக்க விட மாட்டேன்.
- விதிப்படி நடப்பது நடந்தே தீரும். அழிவது அழிந்தே தீரும். இதை நீ நன்கு அறிவாய். எனவே எனக்காக வருந்தாமல் நீ செல்வாய்,
இவ்வாறு கூறி வீடணனை எடுத்து இறுக அணைத்து இன்றோடு உடன்பிறப்பு என்ற பந்தம் அற்று விட்டது என கண்ணில் நீர் பாய ஏக்கத்தினால் நீண்ட நேரம் பார்த்திருந்தான். உயிரும் உடலும் ஒடுங்கினான் வீடணன்.இனி பேசி ஆகும் செயல் ஏதுமில்லை என்றுணர்ந்தான். அரக்கர் படை தொழஅங்கிருந்து அகன்றான். பிள்ளமை தன்மையைத் துறந்து மனம் கலங்கி கடல் நீரைத் தன் கண்ணீராய் மாற்றி குருதி நீராகப் பெருக நின்றான்.
Comments
Post a Comment