தமிழின் இனிமை-பாரதிதாசன்

 பாரதிதாசன்-தமிழின் இனிமை (sem-1)


கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்,

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!


சுவையும் தமிழும்

கனியில் உள்ள சுவை, கரும்பில் உள்ள சாறு, மலரில் உள்ள தேன், காய்ச்சிய வெள்ளப்பாகில் உள்ள சுவை, பசுவில் இருந்து கிடைக்கும் பால், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் இவையாவும் இனிமையானவை என்றாலும் தமிழ்மொழி என்னுயிர் போன்றது என்பேன் என்று கவிஞர் பாரதிதாசன் கூறுகின்றார்.


பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்

புனலிடை வாய்க்கும் கலியும்,

குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை

கொட்டிடும் அமுதப் பண்ணும்,

குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்

கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,

விழைகுவ னேனும், தமிழும் - நானும்

மெய்யாய் உடலுயிர் கண்டீர்!


இசையும் தமிழும்

மலர்கள் நிறைந்த தோட்டத்தில் கேட்கும் வண்டின் ஒலி, ஓடை நீரின் ஓசை, இனிய புல்லாங்குழலின் இசை, வீணையின் இனிய நாதம், குழந்தையின் அழகிய மழலைப் பேச்சு, கொஞ்சிடும் பெண்களின் இதழின் வாய்ப்பு இவை யாவும் சிறந்தவை என்றாலும் தமிழும் நானும் உடலும் உயிருமாய்  இணைந்திருக்கின்றோம் என்று கவிஞர் கூறுகின்றார்.


நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே

நிறையக் குளிர்வெண் ணிலவாம்,

காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே

கடல்மேல் எல்லாம் ஒளியாம்,

மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல

மலைகளின் இன்பக் காட்சி,

மேலென எழுதும் கவிஞர் - தமிழின்

விந்தையை எழுதத் தரமோ?


இயற்கையும் தமிழின் விந்தையும்

நீலம் படர்ந்த வானம், குளிர்ந்த வெண்ணிலவு, காலையில் எழும் சூரியன், அதனால் கடலில் பரவும் வெளிச்சம், மாலையில் சூரியன் மறையும் போது தெரியும் மலையின் அழகு, இவை அனைத்தும் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் சிறந்தது என்பதை எழுதும் கவிஞர்கள் தமிழின் விந்தையை எழுதிவிட முடியுமோ? என்ற வினாவை முன்வைக்கின்றார் கவிஞர்.


செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்

தேக்கிய கறியின் வகையும்,

தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்

தயிரொடு மிளகின் சாறும்,

நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்

நாவி லினித்திடும் அப்பம்,

உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே!


உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!

செந்நெல் சோறு, பசு நெய் கலந்த கறிவகை, தானிய முதிரை, கட்டித் தயிர், மிளகின் சாறு, சுவை மிகுந்த கிழங்கு, நாவில் இனித்திடும் அப்பம் இவை யாவும் நம் உடலை மட்டுமே வளர்க்க உதவுகின்றன. ஆனால் நம் உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழ் ஒன்றுதான் என்பதைத் தமிழின் இனிமை என்னும் இக்கவிதையில் கவிஞர் பாரதிதாசன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Comments