நாலடியார் - நட்பாராய்தல்

 நாலடியார் - நட்பாராய்தல்


கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுரம் இலாளர் தொடர்பு. 211

விளக்கம்

நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போலாம். எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போலும் தன்மையுடையதாகும். (கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும் என்பதாம்).



இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்

நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்

புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!

மனமறியப் பட்டதொன் றன்று. 212

விளக்கம்

பொன்னைக் கொழித்து விழும் அருவியின் ஓசையால் பறவைகள் அஞ்சி ஓடுதற்கு இடமான அழகிய மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! ஒருவன் உயர் குடிப்பிறப்பை நோக்கி, 'இவர் இடையில் மாறமாட்டார்' என்னும் நம்பிக்கையால் நட்புக் கொள்வதேயல்லாமல், பிறருடைய மனநிலையை அறிந்து நட்புக் கொள்வது என்பதில்லை. (எனினும் நட்புக்கு மனக்கருத்தும் அறிதல் வேண்டும் என்பது உட்பொருள்).



யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய். 213

விளக்கம்

யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். (கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவா¢டம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம் என்பது கருத்து.



பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்

நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து

யாத்தாரோடு யாத்த தொடர்பு. 214

விளக்கம்

பலநாட்களாகப் பக்கத்தில் இருந்து பழகுவராயினும் சில பொழுதேனும் தன் மனத்துடன் பொருத்தமில்லாதரோடு அறிவுடையோர் சேரமாட்டார்கள். அங்ஙனமின்றித் தம் நெஞ்சம் பிணித்தாரோடு கொண்ட நட்பினை, தம்மை விட்டுப் பல நாட்கள் விலகியிருந்தார்கள் என்பதற்காக அவர்களைக் கைவிடுவார்களோ? (மனப்பொருத்தம் உடையாரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் நட்பாங்கிழமை தரும்' என்பது குறள்).



கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாகும் நட்பாரும் இல். 215

விளக்கம்

கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி, தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை விரும்புவாரும் இல்லை; நட்புச் செய்வாரும் இல்லை. (என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவரே நட்புக்கு அழகாம்).

Comments