மரங்களைப் பாடுவேன் - வைரமுத்து

 மரங்களைப் பாடுவேன் - வைரமுத்து

வாரும் வள்ளுவரே
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?

வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அத்தனை இழிவா?

பக்கத்தில் யாரது
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?

மரம்
சிருஷ்டியில் ஒரு சித்திரம்
பூமியின் ஆச்சரியக்குறி
நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்

விண்மீனுக்குத் தூண்டில்போடும்
கிளைகள்
சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்
உயிர் ஒழுகும்
மலர்கள்
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு

மனிதன் தோன்றுமுன்
மரம் தோன்றிற்று
மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்

மனித ஆயுள்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்
மரம் அப்படியா..?
வளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்

மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி
மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்
வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?

மரத்தை அறுத்தால்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்
மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்

மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்
நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?

மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?

மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?

பறவைக்கும் விலங்குக்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன்
மரம்

மரத்தின் முதல் எதிரி
மனிதன்

ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்

உண்ணக்கனி - ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்

பிறந்தோம்
தொட்டில்
மரத்தின் உபயம்

நடந்தோம்
நடை வண்டி
மரத்தின் உபயம்

எழுதினோம்
பென்சில் பலகை
மரத்தின் உபயம் மணந்தோம்
மாலை சந்தனம்
மரத்தின் உபயம்

புணர்ந்தோம்
கட்டில் என்பது
மரத்தின் உபயம்

துயின்றோம்
தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்

நடந்தோம்
பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்

எறிந்தோம்
சுடலை விறகு
மரத்தின் உபயம்

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்

மனிதா
மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா

ஒவ்வொரு மரமும்

போதிமரம்!


மரத்தை பழித்த புலவர்கள்: 

    வள்ளுவர் மக்கட் பண்பில்லாதவரை  மரம் என்றும் ஒளவை நீட்டோலை வாசியாதவனை  மரம் என்றும் பாரதி பாஞ்சாலியை மீட்காத பாமரரை நெட்டை மரங்கள் என்றும் உவமைபடுத்தினர்.

வாரும் வள்ளுவரே

மக்கட் பண்பில்லாதவரை

என்ன சொன்னீர்?

மரம் என்றீர்

மரம் என்றால் அவ்வளவு

மட்டமா?


வணக்கம் ஔவையே

நீட்டோலை வாசியான்

யாரென்றீர்?

மரம் என்றீர்

மரம் என்றால் அத்தனை இழிவா?


பக்கத்தில் யாரது

பாரதிதானே

பாஞ்சாலி மீட்காத

பாமரரை என்னவென்றீர்?

நெட்டை மரங்கள் என்றீர்

மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?


ஞானம் தந்த மரம்:

மனிதன் தராத ஞானத்தைக் கவிஞருக்கு மரம் தந்தது. மரத்தின் கிளைகள் விண்மீனுக்குத் தூண்டில் போடக்கூடியன. சிரிப்பில் ஊற்றிவைத்த இலைகளும் உயிர் ஒழுகும் மலர்களும் உடைய மரமே தனக்கு ஞானம் தந்ததாகக் கவிஞர் கூறியுள்ளார்.

மனிதனும் மரமும்  :

          கவிஞர் வைரமுத்து தன்னுடைய கவிதையில் மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளார். மனிதன் முப்பது வயதுக்கு மேல் வளர மாட்டான். ஆனால் மரமோ இருக்கும் வரை பூப் பூக்கும். இறக்கும் வரை காய் காய்க்கும் என்று கூறியுள்ளார்.

          மரத்தின் கிளையை வெட்டி நட்டால் அது கிளைத்து வளர்ந்து மற்றொரு மரமாகும். மனிதனின் உடல் உறுப்பை வெட்டினால் அது தனித்து வளர்ந்து மனிதனாகாது. ஏன் மீண்டும் அது அதே உறுப்பாகக் கூட வளராது.

         மரத்தை அறுத்தால் அதில் உள்ள வளையங்கள் அது எத்தனை வயதுடையது என்பதனைக் காட்டிவிடும். மனிதனை அறுத்தால் செலவுதான் மிஞ்சும்.

        மரம் கோடைக் காலத்தில் தன் இலைகளை உதிர்த்துவிடும். மொட்டை மரமாகக் காட்சிதரும். பின்னர் மீண்டும் தளைத்துவிடும். மனிதனுக்கு முடி கொட்டி மொட்டையானால் மீண்டும் வளராது.

        ஆக, ‘மனிதனை விட மரமே உயர்ந்தது’ என்று கவிஞர் மரத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடு கூறியுள்ளார்.

மரத்தின் கொடை:

      கவிஞர் வைரமுத்து தன்னுடைய கவிதையில் மரத்தை இழந்தால் நாம் இழப்பவைகள் எவை என்பது குறித்துக் கூறியுள்ளார்.

      நாம் சுவாசித்து வெளிவிடும் காற்று கார்பன் டை ஆக்சைடு. அதனை மரங்கள் சுவாசித்து ஆக்சிசனை வெளிவிடுகின்றன. அதுவே நமது சுவாசக் காற்று. மரங்கள் இல்லையெனில் நாம் சுவாசக் காற்றுக்குத் திண்டாட வேண்டிவரும்.

      மனிதனுக்கு மற்றும் உயிர்களுக்கும் நீரே அடிப்படைத்தேவை. நீரைத் தருவது மழை. மரங்களால்தான் மழைப் பொழிவு குறைந்துவிடும். பின்னர் நீருக்காக மனிதனும் உயிரினங்களும் அவதியுறும்.

      இவை மட்டுமல்ல இன்னும் இந்தப் பட்டியல் பின்வருமாறு நீளுகிறது. 

உண்ணக்கனி- ஒதுங்க நிழல்

உடலுக்கு மருந்து- உணர்வுக்கு விருந்து

அடையக்குடில்- அடைக்கக் கதவு

அழகு வேலி- ஆடத்தூளி

தடவத் தைலம்- தாளிக்க எண்ணெய்  

எழுதக் காகிதம்- எரிக்க விறகு

     இத்தகைய உதவியைச் செய்யும் மரம் மனிதனுக்கு இன்றியமையாதது. அதனால்தான் கவிஞர் மனிதனின் முதல் நண்பன் மரம் என்கிறார். ஆனால் மனிதனோ மரத்தை அழி்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறான்.

  மனிதனின் முதல் நண்பன் 

  மரம்

  மரத்தின் முதல் எதிரி

  மனிதன்

  ஆயுதங்களை மனிதன் 

  அதிகம் பிரயோசித்தது

  மரங்களின் மீதுதான்


அதனால்தான் கவிஞர் மரத்திற்கு முதல் எதிரி மனிதன்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments