- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
இனியவை கூறல்- அதிகாரம்-10
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
குறள் விளக்கம்:
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
குறள் 92:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
குறள் விளக்கம்:
அணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.
குறள் 93:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
குறள் விளக்கம்:
முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
குறள் விளக்கம்:
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.
குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
குறள் விளக்கம்:
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்: பிறவெல்லாம் அணிகலன்கள்ஆகா.
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
குறள் விளக்கம்:
நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும் சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக , அறம் வளர்ந்து பெருகும்.
குறள் 97:
நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
குறள் விளக்கம்:
பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
குறள் விளக்கம்:
சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுபிறவியிலும் இப்பிறவியிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்,
குறள் 99:
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
குறள் விளக்கம்:
இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், கடுமையான சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியருப்பக் காய்கவர்ந் தற்று.
குறள் விளக்கம்:
இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே.
Comments
Post a Comment