திருக்குறள்-செய்நன்றி அறிதல்

 திருக்குறள்

செய்நன்றி அறிதல்- அதிகாரம்-11 


குறள் 101: 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

குறள் விளக்கம்:

உதவி செய்கிறோம் என்று அறியாமலேயே செய்த உதவியானது, இந்தப் பூமியையும், வானத்தையும்விட மேலானது.


குறள் 102: 

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

குறள் விளக்கம்:

சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும், அதுவே இந்த உலகத்தைவிடவும் மிகப் பெரியது.


குறள் 103: 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

குறள் விளக்கம்:

எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.


குறள் 104: 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணயாக்

கொள்வர் பயன்தெரி வார்.

குறள் விளக்கம்:

ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும், அந்த உதவியின் பயன் அறிந்தவர்கள், அந்த உதவியை பனையளவுக்கு உயர்த்திப் பார்ப்பார்கள்.


குறள் 105: 

உதவி வரைத்தன்று உதவி; உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

குறள் விளக்கம்:

ஒருவர் செய்த உதவியின் மதிப்பு, அந்த உதவியின் அளவைப் பொறுத்ததன்று; அந்த நபரின் பெருந்தன்மையைப் பொறுத்தே அமைகிறது.


குறள் 106: 

மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

குறள் விளக்கம்:

மாசற்றவர்கள் உறவை மறக்கவும் வேண்டாம், துன்பத்தில் இருந்தபோது நம்மை விட்டு விலக நினைக்காதவர் நட்பை துறக்கவும் வேண்டாம்.


குறள் 107: 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.

குறள் விளக்கம்:

உதவி செய்ததன் மூலம் தன்னுடைய துன்பத்தை நீக்கியவரின் நட்பை, தோன்றும் அடுத்தடுத்த பிறப்புகளில் நினைத்துப் போற்றுபவரே சான்றோர்.


குறள் 108: 

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

குறள் விளக்கம்:

நமக்குப் பிறர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல; அதே நேரத்தில், நமக்கு ஒருவர் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.


குறள் 109: 

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

குறள் விளக்கம்:

ஒருவர் கொல்வது போன்ற துன்பம் செய்தாலும், அவர் முன்னர் செய்த நன்மையை நினைத்தாலே அந்தத் துன்பம் மறைந்துவிடும்.


குறள் 110: 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

குறள் விளக்கம்:

எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. ஆனால், தனக்குப் பிறர் செய்த நன்றியை மறந்தவருக்கு முக்தி இல்லை.


-திருவள்ளுவர்

Comments