திருக்குறள்- ஒப்புரவு அறிதல்

 திருக்குறள்

ஒப்புரவு அறிதல்- அதிகாரம் - 22


குறள் 211: 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ உலகு.

குறள் விளக்கம்:

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே.


குறள் 212: 

தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

குறள் விளக்கம்:

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.


குறள் 213: 

புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

குறள் விளக்கம்:

ஒப்புரவைரப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகதிலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.


குறள் 214: 

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்.

குறள் விளக்கம்:

'எவ்வுயிரும் ஒத்த தன்மையானது' என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன். ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.


குறள் 215: 

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

குறள் விளக்கம்:

உலகினர் எல்லோரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவானுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.


குறள் 216: 

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

குறள் விளக்கம்:

செல்வம் நல்ல பண்பு உடையவனிடம் சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்.


குறள் 217: 

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

குறள் விளக்கம்:

செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன்தரத் தவறாத மருந்து மரம் போல எப்போதும் பயன் தருவதாகும்.


குறள் 218: 

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

குறள் விளக்கம்:

ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள் வசதி இல்லாத காலத்திலும் முடிந்த வரை உதவத் தளர மாட்டார்கள்.


குறள் 219: 

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா ஆறு.

குறள் விளக்கம்:

ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.


குறள் 220: 

ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து.

குறள் விளக்கம்:

ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.


-திருவள்ளுவர்

Comments