திருக்குறள்- புலால் மறுத்தல்

திருக்குறள்

புலால் மறுத்தல்-அதிகாரம் - 26


குறள் 251: 

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

குறள் விளக்கம்:

தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?


குறள் 252: 

பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

குறள் விளக்கம்:

பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவருக்கு இல்லை.


குறள் 253: 

படைகொண்டார் நெஞ்சம் போல் நன்றூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

குறள் விளக்கம்:

ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம். கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது.


குறள் 254: 

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.

குறள் விளக்கம்:

கொல்லாமையே அருள் ஆகும்: ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை ; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும்.


குறள் 255: 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

குறள் விளக்கம்:

உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத இயல்பில்தான் உள்ளது. ஊன் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.


குறள் 256: 

தினல்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

குறள் விளக்கம்:

புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உ.யிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.


குறள் 257: 

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்

புண்அது உணர்வார்ப் பெறின்.

குறள் விளக்கம்:

புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உணர்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்.


குறள் 258: 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குறள் விளக்கம்:

பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்துவந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.


குறள் 259: 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

குறள் விளக்கம்:

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருநத்தல் மிகவும் நன்மையானதாகும்.


குறள் 260: 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

குறள் விளக்கம்:

கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கை தொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்.


-திருவள்ளுவர்

Comments