- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
தவம்- அதிகாரம் - 27
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
குறள் விளக்கம்:
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிர்க்குத் தாம் துன்பஞ் செய்யாமிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.
குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
குறள் விளக்கம்:
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்: தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே.
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
குறள் விளக்கம்:
துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உறவுகதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்.
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
குறள் விளக்கம்:
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.
குறள் 265:
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
குறள் விளக்கம்:
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.
குறள் 266:
தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு.
குறள் விளக்கம்:
தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர். மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர்.
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
குறள் விளக்கம்:
சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.
குறள் 268:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
குறள் விளக்கம்:
தான் என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.
குறள் 269:
கூற்றம் குதித்தாலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
குறள் விளக்கம்:
தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றிகொள்வதற்கு முடியும்.
குறள் 270:
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
குறள் விளக்கம்:
உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.
Comments
Post a Comment