- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
தீவினையச்சம்- அதிகாரம்-21
குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியோர் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
குறள் விளக்கம்:
தீய வினை என்ன அகங்காரத்துக்கு, கேடு செய்பவர்கள் அஞ்சமாட்டார்கள். ஆனால், வாழ்வை நேசிப்பவர்கள் அஞ்சுவார்கள்.
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
குறள் விளக்கம்:
தீய செயல்களால் எப்போதும் கெடுதல்தான் ஏற்படும். அதனால், நெருப்பைவிட தீய செயல்கள் தீங்கானது.
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
குறள் விளக்கம்:
தனக்குத் தீமை செய்தவர்க்குக்கூட தீமை செய்யாமல் இருப்பதுதான் அறிவினுள் சிறந்த அறிவு.
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
குறள் விளக்கம்:
மறந்தும்கூட பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது. அப்படி செய்ய நினைத்தால் அறமே உனக்குத் தீங்கு விளைவிக்கும்.
குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
குறள் விளக்கம்:
ஏதும் இல்லாதவனுக்குக் கெடுதல் செய்ய நினைக்காதே; அப்படிச் செய்தால், உன்னிடம் இருக்கும் அனைத்தும் விலகிப்போய் நீயே ஏதும் இல்லாதவனாகிவிடுவாய்.
குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
குறள் விளக்கம்:
தன்னைத் துன்பங்கள் தீண்டக் கூடாது என்று நினைப்பவர்கள், மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யக் கூடாது.
குறள் 207:
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்றடும்.
குறள் விளக்கம்:
எந்த வித எதிர்ப்பையும் மீறி ஒருவர் வாழ்க்கையில் மீண்டு வர முடியும். ஆனால், நாம் செய்யும் தீய செயல்களால் வரும் பகை நம்மைத் துன்புறுத்திக் கொல்லும்.
குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.
குறள் விளக்கம்:
ஒருவரை அவருடைய நிழல் தொடர்வதைப்போல, அவர் செய்த கேடும் அவரைத் தொடர்ந்து வந்து துன்பம் தரும்.
குறள் 209:
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
குறள் விளக்கம்:
ஒருவன் தன் மீது நேசம் உள்ளவனாக இருந்தால், மற்றவர்களுக்கு எப்போதும் தீங்கு செய்யக் கூடாது.
குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
குறள் விளக்கம்:
தீவினைகள் செய்யாமல் இருப்பவன் வாழ்க்கையில் ஒருபோதும் துன்பம் இல்லாமல் இருப்பான்.
Comments
Post a Comment