- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
புகழ்- அதிகாரம்-24
குறள் 231:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
குறள் விளக்கம்:
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுக்குப் புகழோடு வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் உயிருக்கு ஊதியம் என்பது வேறு யாதும் இலலை.
குறள் 232:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
குறள் விளக்கம்:
புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது.
குறள் 233:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.
குறள் விளக்கம்:
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேன் உலகு.
குறள் விளக்கம்:
உலகத்தின் எல்லைவரை பரவிநிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது, அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.
குறள் 235:
நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
குறள் விளக்கம்:
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும். செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல் பிறருக்கு ஒரு போதும் கிடைக்காது.
குறள் 236:
தோன்றிற் புகழொடு தோன்றுக ஆஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
குறள் விளக்கம்:
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடு தான் தோன்ற வேண்டும், புகழ் இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமல் போவதே நல்லது.
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
குறள் விளக்கம்:
தமக்கு புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காவோ?
குறள் 238:
வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.
குறள் விளக்கம்:
தமக்குப்பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்.
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
குறள் விளக்கம்:
புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங்கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவிதில் குறைபாடு அடையும்.
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
குறள் விளக்கம்:
வகை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர். புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.
Comments
Post a Comment