- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
அவா அறுத்தல்-அதிகாரம் 37
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
குறள் விளக்கம்:
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
குறள் விளக்கம்:
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.
குறள் 363:
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்.
குறள் விளக்கம்:
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
குறள் 364:
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
குறள் விளக்கம்:
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.
குறள் 365:
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்.
குறள் விளக்கம்:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
குறள் விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
குறள் விளக்கம்:
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.
குறள் 368:
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
குறள் விளக்கம்:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்.
குறள் விளக்கம்:
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
குறள் விளக்கம்:
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.
Comments
Post a Comment