- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
பொச்சாவாமை-அதிகாரம் 54
குறள் 531:
இறந்த வெகுளியில் தீதே சிறந்த
உவமை மகிழ்ச்சியிற் சோர்வு.
குறள் விளக்கம்:
சிறப்பான உவகையாலே மகிழ்ச்சி அடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் தீமையைக் காட்டிலும் தீமை தருவதாகும்.
குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
குறள் விளக்கம்:
நாளுக்கு நாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்.
குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பானூ லோர்க்குந் துணிவு.
குறள் விளக்கம்:
மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலோர்க்கும் ஒத்ததாக விளங்கும் ஒரு முடிவு ஆகும்.
குறள் 534:
அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
குறள் விளக்கம்:
அச்சம் உடையவர்க்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.
குறள் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
குறள் விளக்கம்:
துன்பம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்தபோது தன் பிழையை நினைத்து வருந்துவான்.
குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயி னதுவொப்ப தில்.
குறள் விளக்கம்:
மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமலிருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.
குறள் 537:
அரியவென் றாகத இல்லை பொச்சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
குறள் விளக்கம்:
மறவாமை உன்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.
குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
குறள் விளக்கம்:
சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு எழுமையும் நன்மை இல்லை.
குறள் 539:
இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
குறள் விளக்கம்:
தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும்போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
குறள் 540:
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெரின்.
குறள் விளக்கம்:
தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்.
Comments
Post a Comment