திருக்குறள்– கேள்வி

திருக்குறள்

கேள்வி-அதிகாரம் 42


குறள் 411: 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

குறள் விளக்கம்:

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.


குறள் 412: 

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

குறள் விளக்கம்:

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.


குறள் 413: 

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

குறள் விளக்கம்:

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக்கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.


குறள் 414: 

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

குறள் விளக்கம்:

தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெறவேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல்போலத் துணையாகும்.


குறள் 415: 

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

குறள் விளக்கம்:

நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல்போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்.


குறள் 416: 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

குறள் விளக்கம்:

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.


குறள் 417: 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்.

குறள் விளக்கம்:

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்.


குறள் 418: 

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

குறள் விளக்கம்:

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்.


குறள் 419: 

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது.

குறள் விளக்கம்:

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே. கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்


குறள் 420: 

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

குறள் விளக்கம்:

கேள்வியாகிய அறிவுச் சுவையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

-திருவள்ளுவர்


Comments