- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
இறைமாட்சி- அதிகாரம் 39
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.
குறள் விளக்கம்:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.
குறள் விளக்கம்:
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
குறள் விளக்கம்:
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
குறள் விளக்கம்:
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
குறள் விளக்கம்:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
குறள் 386:
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
குறள் விளக்கம்:
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
குறள் விளக்கம்:
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.
குறள் விளக்கம்:
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.
குறள் விளக்கம்:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
குறள் விளக்கம்:
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
Comments
Post a Comment