திருக்குறள்–ஊழ்

திருக்குறள்

ஊழ்- அதிகாரம் 38


குறள் 371: 

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.

குறள் விளக்கம்:

ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.


குறள் 372: 

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

குறள் விளக்கம்:

இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.


குறள் 373: 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும்.

குறள் விளக்கம்:

நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.


குறள் 374: 

இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

குறள் விளக்கம்:

ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.


குறள் 375: 

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.

குறள் விளக்கம்:

செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையாவதாலும், உண்டு.


குறள் 376: 

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.

குறள் விளக்கம்:

வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாதபோது எதுவுமே ஆகாது; கொண்டுபோய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் நம் பொருள் போகாது.


குறள் 377: 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அறிது.

குறள் விளக்கம்:

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல், கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.


குறள் 378: 

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின்.

குறள் விளக்கம்:

வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால், துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்.


குறள் 379: 

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்.

குறள் விளக்கம்:

ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அஃது இல்லாத கேடுகாலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?


குறள் 380: 

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்.

குறள் விளக்கம்:

ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன? மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்


-திருவள்ளுவர்

Comments