திருக்குறள்–வெருவந்த செய்யாமை

 திருக்குறள்

வெருவந்த செய்யாமை-அதிகாரம் 57

குறள் 561:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

குறள் விளக்கம்:

ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாகவே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.


குறள் 562:

கடிதொச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

குறள் விளக்கம்:

நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும்போது, கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.


குறள் 563:

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குறள் விளக்கம்:

கடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப்போய் அழிவை அடைவான்.


குறள் 564:

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

குறள் விளக்கம்:

எம் அரசன் கடுமையானவன் என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்.


குறள் 565:

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்ன துடைத்து.

குறள் விளக்கம்:

எளிதாகக் காணமுடியாத தன்மையும், கமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.


குறள் 566:

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

மநீடின்றி ஆங்கே கெடும்.

குறள் விளக்கம்:

கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து, அப்போதே கெடும்.


குறள் 567:

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

குறள் விளக்கம்:

கடுமையான சொல்லும், முறைகடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.


குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறின் சிறுகுந் திரு.

குறள் விளக்கம்:

அமைச்சர் ணிதலானவரோடு கலந்து ஆராயந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானனால், அவனுடைய செல்வம் சுருங்கும்.


குறள் 569:

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெரு வந்து வெய்து கெடும்.

குறள் விளக்கம்:

போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.


குறள் 570:

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலைக்குப் பொறை.

குறள் விளக்கம்:

கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும். அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு யாதும் இல்லை.

-திருவள்ளுவர்

Comments