திருக்குறள்–ஊக்கமுடைமை

 திருக்குறள்

ஊக்கமுடைமை- அதிகாரம் 60


குறள் 591:

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

குறள் விளக்கம்:

ஊக்கம் உடைமையை உடையவர் என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது, ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.


குறள் 592:

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

குறள் விளக்கம்:

ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும். மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.


குறள் 593:

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

குறள் விளக்கம்:

உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள்.


குறள் 594:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அடைவிலா

ஊக்கம் உடையான் உழை.

குறள் விளக்கம்:

தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம் தானே அவரிருக்கும் இடத்திற்கு வழகேட்டுக்கொண்டு போய்ச்சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.


குறள் 595:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

குறள் விளக்கம்:

நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும். அது போலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.


குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

குறள் விளக்கம்:

உயர்ந்த நிவைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும். அந்த நிலை கை கூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும்கை விடவே கூடாது.


குறள் 597:

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.

குறள் விளக்கம்:

தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலை நிறுத்தும். அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.


குறள் 598:

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

குறள் விளக்கம்:

யாம் வள்ளன்மை உடையோம் என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.


குறள் 599:

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெருஉம் புலிதாக் குறின்.

குறள் விளக்கம்:

பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.


குறள் 600:

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்

மரம் மக்களாதலே வேறு.

குறள் விளக்கம்:

ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே. அந்த ஊக்கம் ஆசிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே.

-திருவள்ளுவர்

Comments