திருக்குறள்–ஆள்வினை உடைமை

 திருக்குறள்

ஆள்வினை உடைமை–அதிகாரம் 62


குறள் 611:

அருமை யுடைத்தன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

குறள் விளக்கம்:

இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்.


குறள் 612:

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தனறு உலகு.

குறள் விளக்கம்:

ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும். ஆதலால், செய்யும் செயலிடத்திலேயே முயற்சியற்றிருப்பதை விட்டு விட வேண்டும்.


குறள் 613:

தாளாண்மை யென்னுந் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை யென்னுஞ் செருக்கு.

குறள் விளக்கம்:

எல்லாருக்கும் உதவி செய்தல் என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலே தான் நிலைத்திருப்பது ஆகும்.


குறள் 614:

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்-மை போலக் கெடும்.

குறள் விளக்கம்:

போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாதது போல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்.


குறள் 615:

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றுந் தூண்.

குறள் விளக்கம்:

தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி, அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.


குறள் 616:

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

குறள் விளக்கம்:

இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லமையை உண்டாக்கும்.


குறள் 617:

மடியுளான் மாமுகடி யென்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்.

குறள் விளக்கம்:

சோம்பல் இல்லாதவனின் முயிற்சியிலே தாமரையாளான திருமகன் சென்று வாழ்வாள். சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவி தான் சென்று வாழ்வாள்.


குறள் 618:

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

குறள் விளக்கம்:

நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது. அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்.


குறள் 619:

தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

குறள் விளக்கம்:

தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.


குறள் 620:

ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்.

குறள் விளக்கம்:

சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச்செய்பவர் ஆவார்கள்.

-திருவள்ளுவர்

Comments