திருக்குறள்- சொல்வன்மை

  திருக்குறள்

சொல்வன்மை- அதிகாரம்-65


குறள் 641:

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.

குறள் விளக்கம்:

நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்காத ஒரு சிறந்த சிறப்புமாகும்.


குறள் 642:

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

குறள் விளக்கம்:

மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும்.


குறள் 643:

கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

குறள் விளக்கம்:

கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உயைவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.


குறள் 644:

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கும் இல்.

குறள் விளக்கம்:

கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை.


குறள் 645:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

குறள் விளக்கம்:

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல் வேண்டும்.


குறள் 646:

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றோர் கோள்.

குறள் விளக்கம்:

தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே, மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை.


குறள் 647:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது எவருக்குமே அருமையாகும்.


குறள் 648:

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

குறள் விளக்கம்:

கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.


குறள் 649:

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

குறள் விளக்கம்:

குறைவில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு, எப்போதும் விரும்புவார்கள்.


குறள் 650:

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.

குறள் விளக்கம்:

தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மனம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்


Comments