திருக்குறள்- நாடு

 திருக்குறள்

நாடு- அதிகாரம்-74

 

குறள் 731:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

குறள் விளக்கம்:

நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும்.


குறள் 732:

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.

குறள் விளக்கம்:

பெரும்பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத்தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுந்த விளைச்சல் உடையதாகியும் விளங்குவதே நல்ல நாடு.


குறள் 733:

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவதற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.

குறள் விளக்கம்:

வேற்றுநாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்துக் காப்பதே, நல்ல நாடாகும்.


குறள் 734:

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

குறள் விளக்கம்:

நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் லளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்.


குறள் 735:

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

குறள் விளக்கம்:

பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும் இல்லாதது நாடு.


குறள் 736:

கேடறியா கெட்ட விடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.

குறள் விளக்கம்:

பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளங்குன்றாத நாடு தான், நாடுகளுள் தலைசிறந்த நாடாகும்.


குறள் 737:

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

குறள் விளக்கம்:

கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர்வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும் ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புகளாம்.


குறள் 738:

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

குறள் விளக்கம்:

மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின் கலைகள், நல்ல காவல் என்னும் இந்த ஐந்துமே நாட்டிற்கு அழகு.


குறள் 739:

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரும் நாடு.

குறள் விளக்கம்:

வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு நாடே ஆகாது.


குறள் 740:

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமைவு இல்லாத நாடு.

குறள் விளக்கம்:

மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்.


-திருவள்ளுவர்


Comments