திருக்குறள்- நட்பு

திருக்குறள்

நட்பு- அதிகாரம் 79


குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

குறள் விளக்கம்:

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.

குறள் விளக்கம்:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.


குறள் 783:

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

குறள் விளக்கம்:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.


குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு.

குறள் விளக்கம்:

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.


குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

குறள் விளக்கம்:

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.


குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு.

குறள் விளக்கம்:

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.


குறள் 787:

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

குறள் விளக்கம்:

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.


குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

குறள் விளக்கம்:

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.


குறள் 789:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

குறள் விளக்கம்:

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.


குறள் 790:

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

குறள் விளக்கம்:

நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.


-திருவள்ளுவர்


Comments