திருக்குறள்- நட்பாராய்தல்

திருக்குறள்

நட்பாராய்தல்- அதிகாரம் 80 

குறள் 791:

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

குறள் விளக்கம்:

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.


குறள் 792:

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

குறள் விளக்கம்:

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.


குறள் 793:

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

குறள் விளக்கம்:

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.


குறள் 794:

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

குறள் விளக்கம்:

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.


குறள் 795:

அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய

வல்லார்நட் பாய்ந்து கொளல்.

குறள் விளக்கம்:

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.


குறள் 796:

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

குறள் விளக்கம்:

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.


குறள் 797:

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

குறள் விளக்கம்:

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.


குறள் 798:

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

குறள் விளக்கம்:

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.


குறள் 799:

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.

குறள் விளக்கம்:

ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.


குறள் 800:

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குறள் விளக்கம்:

மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.


-திருவள்ளுவர்


Comments