திருக்குறள்- கள்ளுண்ணாமை

திருக்குறள்

கள்ளுண்ணாமை- அதிகாரம் 93


குறள் 921:

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

குறள் விளக்கம்:

கள்ளின்மேல் ஆசைகொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார். தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.


குறள் 922:

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.

குறள் விளக்கம்:

அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக. நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக.


குறள் 923:

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

குறள் விளக்கம்:

எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும். அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.


குறள் 924:

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

குறள் விளக்கம்:

"கள்" என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, "நாண்" என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.


குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.

குறள் விளக்கம்:

தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்.


குறள் 926:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

குறள் விளக்கம்:

உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.


குறள் 927:

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

குறள் விளக்கம்:

கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப்படுவர்.


குறள் 928:

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

குறள் விளக்கம்:

கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, "யான் உண்டு அறியேன்" என்று பொய் கூறுவதைக் கைவிடுக.


குறள் 929:

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

குறள் விளக்கம்:

கள்ளுண்டு களித்தவனைக் காட்டி "இஃது நினக்கும் ஆகாது" என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்.


குறள் 930:

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

குறள் விளக்கம்:

கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிகனைக் காண்பான் அல்லவோ? அப்பக் காணும்போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?


-திருவள்ளுவர்


Comments