திருக்குறள்- பிரிவு ஆற்றாமை

திருக்குறள்

பிரிவு ஆற்றாமை- அதிகாரம் 116


குறள் 1151:

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

குறள் விளக்கம்:

பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.


குறள் 1152:

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

குறள் விளக்கம்:

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!.


குறள் 1153:

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.

குறள் விளக்கம்:

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது.


குறள் 1154:

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க் குண்டோ தவறு.

குறள் விளக்கம்:

பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.


குறள் 1155:

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.

குறள் விளக்கம்:

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.


குறள் 1156:

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

குறள் விளக்கம்:

போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.


குறள் 1157:

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

குறள் விளக்கம்:

என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.


குறள் 1158:

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு.

குறள் விளக்கம்:

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.


குறள் 1159:

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

குறள் விளக்கம்:

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!.


குறள் 1160:

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

குறள் விளக்கம்:

காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?.


-திருவள்ளுவர்


Comments