திருக்குறள்- சான்றாண்மை

திருக்குறள்

சான்றாண்மை- அதிகாரம் 99


குறள் 981:

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

குறள் விளக்கம்:

"நமக்கு இது தகுவது" என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்.


குறள் 982:

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉம் அன்று.

குறள் விளக்கம்:

சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே. அது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம் எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.


குறள் 983:

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால் பூன்றிய தூண்.

குறள் விளக்கம்:

அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.


குறள் 984:

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.

குறள் விளக்கம்:

"தவம்" ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது. சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்தது.


குறள் 985:

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.

குறள் விளக்கம்:

ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டுக் கொள்ளுதல். சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.


குறள் 986:

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.

குறள் விளக்கம்:

சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.


குறள் 987:

இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

குறள் விளக்கம்:

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், "சால்பு" என்று சிறப்பாகக் கொள்ளப்படுவதுதான் என்ன பயனை உடையதாகுமோ?


குறள் 988:

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.

குறள் விளக்கம்:

"சால்பு உடைமை" என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.


குறள் 989:

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி யெனப்படு வார்.

குறள் விளக்கம்:

சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தபோதும், தாம் நிலை திரிய மாட்டார்கள்.


குறள் 990:

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.

குறள் விளக்கம்:

பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.


-திருவள்ளுவர்


Comments