- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
சூது- அதிகாரம் 94
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
குறள் விளக்கம்:
தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம் .அவ்வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
குறள் விளக்கம்:
பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?
குறள் 933:
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
குறள் விளக்கம்:
உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்து விடும்
குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவெதொன்று இல்.
குறள் விளக்கம்:
தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக் கூடியது வேறு எதுவும் இல்லை
குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
குறள் விளக்கம்:
முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், கவற்றினையும், அது ஆடும் களத்தினையும், கைத்திறனையும் மேற்கொண்டு விடாதவரே
குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
குறள் விளக்கம்:
சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
குறள் விளக்கம்:
நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்து விடும்.
குறள் 938:
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளிஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
குறள் விளக்கம்:
பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.
குறள் 939:
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
குறள் விளக்கம்:
சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்
குறள் 940:
இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுஉம் காதற்று உயிர்.
குறள் விளக்கம்:
இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.
Comments
Post a Comment