திருக்குறள்- அலர் அறிவுறுத்தல்

திருக்குறள்

அலர் அறிவுறுத்தல்- அதிகாரம் 115


குறள் 1141:

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

குறள் விளக்கம்:

எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.


குறள் 1142:

மலரன்ன கண்ணாள் அருமை அறியா

தலரெமக் கீந்ததிவ் வூர்.

குறள் விளக்கம்:

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.


குறள் 1143:

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

குறள் விளக்கம்:

எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!.


குறள் 1144:

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.

குறள் விளக்கம்:

ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.


குறள் 1145:

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

குறள் விளக்கம்:

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.


குறள் 1146:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

குறள் விளக்கம்:

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் “கிரகணம்” எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.


குறள் 1147:

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்.

குறள் விளக்கம்:

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.


குறள் 1148:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

குறள் விளக்கம்:

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.


குறள் 1149:

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்

பலர்நாண நீத்தக் கடை.

குறள் விளக்கம்:

உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.


குறள் 1150:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்குமிவ் வூர்.

குறள் விளக்கம்:

யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.


-திருவள்ளுவர்


Comments