பராபரக்கண்ணி- குணங்குடிமஸ்தான் சாகிபு

பராபரக்கண்ணி- குணங்குடிமஸ்தான் சாகிபு


1.    அண்ட புவனமென்று ஆடுதிருக் கூத்தினையான்

கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே!

விளக்கம்

எங்கும் நிறைந்த பராபரப் பொருளே! அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நான் கண்டு மகிழும்படி நீ காட்ட வேண்டும் பராபரமே!


2.    ஆதியா யாண்டவனா யஃபாதுவாய் நின்றபெருஞ்

சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே!

விளக்கம்

உலகத்து முதல்வனாய், என்னை ஆட்கொண்டு அருளினவனாய், அவ்வப் பொருளாய் நின்ற பெருஞ்சோதியே! குறைவில்லாதவனாய் எங்கும் சூழ்ந்திருக்கின்றவனே! பராபரமே!


3.    வேத மறைப் பொருளை வேதாந்தத் துட்கருவை

ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே!

விளக்கம்

வேதத்தின் மறைப்பொருளாகவும், வேதாந்தத்தின் உட்கருத்தாகவும் இருக்கின்ற உன்னை ஓதி அறிந்தவர்கள் யாருமில்லை பராபரமே!


4.    அண்ட புவனம் உடன்ஆகாச மென்றுசும்பிக்

கொண்டமெஞ் ஞானக் கூத்தே பராபரமே!

விளக்கம்

அண்டங்களில் உள்ளோரும், உலகத்தில் உள்ளோரும், வானுலகில் உள்ளோரும் துதித்துக் கொண்டாடுகின்ற உண்மை ஞானக்கூத்தே! பராபரமே!


5.    நாவாற் புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம்

பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே!

விளக்கம்

நாவினால் புகழ்வதற்கு எட்டாத நாயகனாய் இருக்கின்றவனே!நாகந்த பூவாய் மலர்ந்நதிருக்கின்றவனே! பராபமே!


6.    பேராற் பெரிய பெரும்பொருளே பேதைதனக்

ரா ரிருந்துபல னாமோ பராபரமே!

விளக்கம்

பேரால் புகழ் பெற்ற பெரிய பரம்பொருளே! ஏழையாகிய எனக்கு யார் இருந்தும் எந்தப் பயனும் இல்லை பராபரமே!


7.    மாறாய நற்கருணை மாவருள்சித் தித்திடவே

பாராயோ வையா பகராய் பராபரமே!

விளக்கம்

ஐயனே! எனக்கு அம்முடைய உயர்ந்த திருவருளானது கைகூடும்படி திருக்கண் திறந்து அருள வேண்டும். பராபரமே!


8.    ஆனாலும் உன்பாதம் யாசித் திருப்பதற்குத்

தானா யிரங்கியருள் தாராய் பராபரமே!

விளக்கம்

எந்தச் சூழலில் நான் இருந்தாலும் உம்முடைய திருவடிகளை யாசித்துக் கொண்டே இருப்பதற்குக் கிருபையோடு அருள் செய்ய வேண்டும். பராபரமே!


9.    நாதாந்த மூல நடுவீட்டுக் குள்ளிருக்கு

மாதவத்தோர்க் கான மருவே பராபரமே!

விளக்கம்

நாத தத்துவத்திற்கு அந்தமான மூல வீட்டினுள்ளே எழுந்தருளி இருக்கின்ற தவம் உடையவர்களுக்குத் தோழனாக விளங்குகின்றாய். பராபரமே!


10.  உடலுக்கு உயிரேஎன் உள்ளமே உன்பத்தைக்

கடலும்மலை யும்திரிந்தும் காணேன் பராபரமே!

விளக்கம்

என் உடலில் இருக்கின்ற உயிரே! என் மனமே! உன் திருவடிகளைக் கடலிலும், மலைகளிலும் திரிந்தும் காண முடியவில்லை. பராபரமே!


11.  மந்திரத்துக் கெட்டா மறைப்பொருளே மன்னுயிரே

சேர்ந்தவெழு தோற்றத்தின் சித்தே பராபரமே.

விளக்கம்

மந்திரத்துக்கு எட்டாத மறைப்பொருளே, நிலைபெற்ற உயிரே, எழுவகைத் தோற்றத்தின் கண்ணும் நிறைந்த சித்துப்பொருளே, பராபரமே.


12.  தனியேனுங் காதரவு தாரணியி லில்லாமல்

அனியாய மாவதுனக் கழகோ பராபரமே.

விளக்கம்

இந்த உலகத்தில் தனியேனுக்கு ஆதரவில்லாமல் அனியாயமாய் போவது உனக்கு அழகாகுமோ, பராபரமே.


13.  ஓடித் திரிந்தலைந்து முன்பாதங் காணாமல்

வாடிக் கலங்குகிறேன் வாராய் பராபரமே.

விளக்கம்

ஓடித் திரிந்து அலைந்தும் உன் திருவடியைக்காணாமல் வாடிக் கலங்குகின்றேன், நீ வந்தருளவேண்டும் பராபரமே.


14.  தூரதி தூரந் தொலைத்துமதி னுன்பாதம்

பாராத பாவத்தாற் பயந்தேன் பராபரமே.

விளக்கம்

தூராதி தூரங்களைக்கடந்து என் அறிவினால் உன் திருவடியை நோக்காத பாவத்தினால் பயமடையப் பெற்றேன், பராபரமே.


15.  தேடக் கிடைக்காத திரவியமே தேன்கடலே

ஈடுனக்கு முண்டோ விறையே பராபரமே.

விளக்கம்

தேடக்கிடையாத திரவியமே, தேன்கடலே, உனக்கு சமானம் ஆவார் ஒருவர் உண்டோ, இறையே பராபரமே.


- குணங்குடிமஸ்தான் சாகிபு

Comments