தமிழ் விடு தூது- மதுரை சொக்கநாதர் [61-68]

 தமிழ் விடு தூது
 [61-68]


61. 
விரியஞ் செய்து வினையொழிய வேராச 
காரியஞ் செய்யுங் கவிதையே - பாரில்

62. 
அரியா சன முனக்கே யானா லுனக்குச் 
சரியாரு முண்டோ தமிழே - விரிவார்

63. 
திகழ்பா வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப் 
புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழவே

64. 
நல்லேரி னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச் 
சொல்லே ருழவர் தொகுந்தீண்டி-நல்லநெறி 

65.
நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற் 

66. 
பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக் 
கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளுஞ் -ரீத்தையரைக்

67. 
குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம் 
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர்- கட்டி

68. 
வளர்ந்தனை பான் முந்திரிகை வாழைக் கனியாய்க் 
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்-திளங்கனியாய்த்


பொருள்:


இப்புவியிற் சிங்காதனம் உனக்குக் கிடைத்தால் உனக்கு ஒப்பாவார் ஒருவருண்டோ தமிழே விரிந்து நிறைந்த விளங்கிய ஒருநான்கு பாட்டும் செய்யுள் வரம்பாகவும் புகழப்படும் பாவினங்கள் மடைப் போக்காகவும் நிகழ நல்ல அழகுடன் செய்யுள் நான்கு கரணங்களையும் ஏராகப் பூட்டிச் சொல்லே ருழவராகிய புலவர் தொகுத்து நெருங்கி நின்று நான்கு நெறிகளையும் விதையாக நன்கு விதைத்து நாற்பொருளையும் மேலே விளையும் பயனாகச் செய்விக்கும் நாளில் மேலோரில் கவிபாடுவதைத் தனதாகக் கொண்ட பிள்ளைப் பாண்டியனும் வில்லியும் ஒட்டக் கூத்தனும் ஆகிய இவர்கள் மூவரும் பல நூல்களைக் கல்லாமல் அவையிற் புலவரென அமரவரும் கீழ்மக்களைக் குட்டியும் செவியறுத்தும் தலைகளை யெல்லாம் கூட்டி வெட்டியும் சீத்தையராகிய களைகளைப் பறிக்க நீ மேலாகத் தூர் கட்டி வளர்ந்தாய்.

- மதுரை சொக்கநாதர்

Comments