தமிழ் விடு தூது- மதுரை சொக்கநாதர் [70-78]

தமிழ் விடு தூது
[70- 78]


70. 
உண்ணப் படுந்தேனே யுன்னோ டுவந்துரைக்கும் 
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் - மண்ணிற்

71. 
குறமென்று பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க் 
குறவென்று மூன்றினத்து முண்டோ - திறமெல்லாம்

72.
வந்தென்றுஞ் சிந்தா மணியா யிருந்தவுனைச் 
சிந்தென்று சொல்லிய நாச் சிந்துமே - அந்தரமேல்

73. 
முற்றுணர்ந்த தேவர்களு முக்குணமே பெற்றார் நீ 
குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் -மற்றொருவர்

74. 
ஆக்கிய வண்ணங்க ளைந்தின்மே லுண்டோ நீ  
நோக்கிய வண்ணங்க ணூறுடையாய்- அடையாய் - நாக்குலவும்

75. 
ஊனரச மாறல்லா லுண்டோ செவிகளுண 
வான நவரசமுண் டாயினாய்- ஏனோர்க்

76. 
கழியா வனப்பொன் றலததிக முண்டோ 
ஒழியா வனப்பெட்டுடையாய் - மொழிவேந்தர்

77.
வாங்கு பொருள்கோள் வகைமூன்றே பெற்றார் நீ 
ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே- பாங்குபெற

78. 
ஓர்முப்பா லன் றியைம்பா லுள்ளா யுனைப்போலச் 
சீர்முப்ப தும்படைத்த செல்வரார்—சேரமான்


பொருள்:


தமிழே நின்னிடத்திருந்து குறம் எனவும் பள் எனவும் புலவர் கொள்கின்றனர், அவற்றைக் கொடுக்கு முனக்கு மூவகையினத்தினும் உறவுண்டோ? பாவின் வலிமை யெல்லாம் பொருந்தி யெந்நாளும் கெடாத மணியா யிருக்கும் உன்னைச் சிந்து என்று சொல்லிய நாவானது கெடுமே. வானத்துமேலுள்ள தேவர்களுங்கூட மூன்று குணம் தாம் பெற்றுள்ளார். நீயோ பத்துக் குற்றமில்லாமல் பத்துக் குணம் பெற்றிருக்கிறாய். ஒருவரால் ஆக்கப்பட்ட வண்ணங்கள் ஐந்தின் மேலுண்டோ? இல்லை.நீ நோக்கிய வண்ணங்கள் நூறுடையாய். நாக்கின் கண் உலவும் குறைவான சுவைகள் ஆறன்றி வேறு உண்டோ? நீயோ செவிகட்கு உணவான ஒன்பது சுவைகளையும் உடையாய் மற்றையுலகத்தில் வாழும் மக்கட்கு அழகு என்பது ஒன்று தான் அன்றி அதிகமுண்டோ? நீயோ வனப்பு எட்டு டையாய். சொல்லப்பட்ட மன்னர்கள் வாங்கும் பொருள் கோள்வகை மூன்றேயாம். நீயோ பொருள்கோள்வகை யெட்டுடையாய். அழகு பொருந்த ஒரு முப்பால் உடையாய், அன்றியும் ஐம்பாலும் உடையாய் ; உன்னைப் போலச் சீர் முப்பதும் பெற்ற செல்வர்கள் யார்? ஒருவரு மில்லையே.


- மதுரை சொக்கநாதர்

Comments