தமிழ் விடு தூது- மதுரை சொக்கநாதர் [78- 88]

தமிழ் விடு தூது
[78 -88]


78.
ஓர்முப்பா லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச் 
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான்

79. 
தன்னடிக் கண்டு தளைவிடுத்தா யேழ்களையுன் 
பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே

80. 
திண்பா வலர்க்கறிவாஞ் செந்தமிழாய் நின்றவுன்னை 
வெண்பாவென் றோதுவது மெய்தானோ- பண்பேர்

81. 
ஒலிப்பாவே சங்கத் துகமூன் றிருந்தாய் 
கலிப்பாவென் றோதல் கணக்கோ—உலப்பில்

82. 
இருட்பா மருண்மாற்றி யீடேற்று முன்னை 
மருட்பாவென் றோதல் வழக்கோ-தெருட்பாப்

83. 
பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
 விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை

84. 
முந்தியொளி யால்விலக்கு முச்சுடரென் பாருனைப்போல்
வந்தென் மனத்திருளை மாற்றுமோ—சிந்தா

85. 
மணிகொடையின் மிக்கதென்பார் வண்கொடையு முன்பேர்
அணியும் பெருமையினா லன்றோ — தணியும்

86. 
துலங்காரங் கண்டசரந் தோள்வளை மற் றெல்லாம் 
அலங்கார மேயுனைப்போ லாமோ-புலங்காணும்

87. 
உன்னைப் பொருளென் றுரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு

88. 
மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள் 
என்ன பொருளுனைப்போ லெய்தாவே-நன்னெறியின்


பொருள்:


சேரமான் கணைக்காலிரும் பொறைக்குப் பொருந்திய காற்றளையை விடுவித்தாய் நீ, அத்தகைய உன் பொன்னடிக்கு ஏழ்தளைகள் உண்டெனப் புகல்வது என்ன அறிவின்பாற்படுமோ ? என்னரசனே! வலிய பாவலர்க்கு அறிவாகிய செந்தமிழாய் நிற்கும் உன்னை வெண்பா என்று சொல்வது உண்மையாமோ? பண்பும் அழகும் உடைய ஓசையமைந்த பாடலே! சங்கத்தில் மூன்று யுகங்களும் இருந்தாய், உன்னைக் கலிப்பா வென்றுரைப்பது முறையோ? கெடாத இருள் போன்ற பரவிய மயக்கத்தை மாற்றி மக்களை நல்வழிப்படுத்தும் உன்னை மருட்பா என்று கூறுவது நல்ல வழக்காகுமோ? தெளிந்த பாடலின் முன் பத்துப்பொருத்தம் பொருந்திநிற்கும் உன்னைத்தான் விருத்தம் என்று கூறுவது முறையாகுமோ? மூன்று சுடர்களும் முந்திவந்து இருட் கூட்டத்தை ஒளியால் விலக்கும் என்று சொல்வார் உலகினர்; அச்சுடர்கள் உன்னைப் போல வந்து என் மனத்துள்ள அஞ்ஞானவிருளை மாற்றுமோ? சிந்தாமணி வண்மையிலுயர்ந்தது என்பார்; அம்மணியின் கொடையும் உன்பேரினை (சிந்தாமணி என்ற நூல்) அணிந்த பெருமையால் வந்ததுவே. தாழ்ந்து சரியும் ஒளிவிளங்கும் பொன் முத்து முதலியவற்றாற் செய்த மாலைகளும, கழுத்திற் பூண்டவணிகளும், தோள்வளைகளும் ஆகிய எல்லா வகையலங்காரமும் அலங்காரம் என்னும் நூலாகிய வுன்னைப்போல் ஆகுமோ? அறிவைத்தரும் உன்னைப் பொருளென்றுரைக்கும பொழுதெல்லாம் பெருகுவாய்; பொன்னைப் பொருளென் றுரைப்பது பொருத்தமோ கன்னம் இட்டுக் கள்வரால் எடுக்கவும், மன்னராற் றண்ட மாகக் கவரவும் வளரும் பொருள்களே மக்கள் கையிலுள்ள பொருள்கள் எல்லாம். என்ன பொருள்கள் அவை. உனைப்போல் உறுதுணையாக வந்துதவா அவைகள்.


- மதுரை சொக்கநாதர்

Comments