- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது[41-49]
...................... காவேந்து
42.
விண்ணீவருங் காணரிய வேதா கமங்களெலாம்
புண்ணியனே யுன்றன் புரோகிதரோ - எண்ணரிய
43.
நல்லபெருங் காப்பியங்க ணாடகா லங்காரஞ்
சொல்லரசே யுன்னுடைய தோழரோ- தொல்லுலகிற்
44.
சார்புரக்குங் கோவே நற் சாத்திரங்க ளெல்லாமுன்
பார்புரக்குஞ் சேனா பதிகளோ - வீரரதிர்
45.
போர்ப்பா ரதமும் புராணம் பதினெட்டுஞ்
சீர்ப்பாவே யுன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள்
46.
அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக
சக்கர வர்த்தியுநீ தானன்றோ -சக்கரமுன்
47.
பேந்தி நெடுந்தேர்மே லேறிச் சுழிகுளம்
நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து
48.
மதுரங் கமழ்மாலை மாற்றணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச்-சதுராய்
49.
முரசங் கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய்
பொருள்:
கற்பகத்தருவை யேந்திய விண்ணுலகத் தேவர்களுங் காண்பதற்கு அருமைபான நான்கு வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் உனக்குப் புரோகிதர் போலும், புண்ணியனே! அளவற்ற நல்ல பெருங்காப்பியங்களும் நாடகங்களும் அலங்காரங்களும் ஆகிய நூல்களெல்லாம் உன்னுடைய நண்பர்கள் போலும், மொழிகட் கரசனே பழமையான இவ்வுலகத்திற் சார்ந்தவர்களைக் காக்கும் வேந்தனே! சாத்திரங்களெல்லாம் உன் பூமியைப் புரக்கும் படைத்தலைவர் கள் போலும். வீரர்கள் நடுங்கத் தக்க போர் வரலாறு கொண்ட பாரதம் என்ற நூலும் பதினெண் புராணங்களும் உன்னுடைய படைகளேயாம். சிறப்புடைய பாடலே! உன்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் அக்கரவர்த்தி யென்று சொல்லலா மென்பார்; இப்பூவுலகிற் சக்கரவர்த்தி யும் நீதானன்றோ? சக்கர முன்னர் ஏந்தி நெடுந்தேர் மேலேறிச் சுழிகுளம் இறங்கி நீந்தி, ஒரு கூடம் நிறைந்த சதுக்கத்தில் வந்தமர்ந்து, இனிமை பாவும் மாலைமாற்றினை யணிந்து, சூழுஞ் சதுரங்க சேனைகளும் விளங்க கன்மை யாகி முரசமுழங்க முடிவேந்தர் சூழ உயர்வான சங்கப் பலகை மேலிருந்து வாழ்ந்து.
Comments
Post a Comment