தமிழ் விடு தூது- மதுரை சொக்கநாதர் [139-150]

 

தமிழ் விடு தூது
[139-150]


139. 

..........................................பலநாளும்


140. 

நின்றவூர்ப் பூசலார் நீடிரவெ லாநினைந்து 

குன் றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும்


141. 

தாயான கங்கைமுடி தாள் குளிரக் கண்ணப்பர் 

வாயா லுமிழ்ந்ததிரு மஞ்சனமுந் - தூயமழைத்


142. 

துன்பார் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில் 

வன்பா யளித்தபரி வட்டமும் - இன்பாத்


143. 

தணிவரிய மானக்கஞ் சாறனார் சாத்தும் 

மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார்


144. 

காமன்பான் முன்சேந்த கண்போல மூர்த்தியார் 

தாமன்பான் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போற்


145. 

காக்குமரி புனைந்த கண்மலருங் காதலொடு 

சாக்கியர்தாஞ் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா


146. 

ஆக்கிய மாறனமுதுஞ் சிறுத்தொண்டர் 

மாக்கறியுந் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய


147. 

காரா ரிரவிற் கணம்புல்லர் தம்முடிமேற் 

சீராக வேற்றியசெந் தீபமும் - ஆரால்


148. 

அமைத்து வணங்கலுறு மங்கணர்க்குப் பூசை 

சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர்


149. 

அற்சனைபாட் டேயாமென் றாரூரர்க் காதியிலே 

சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே


150. 

செய்தாய் நால் வேதந் திகைத்தொதுங்கப் பித்தனென்று 

வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்


பொருள்:

திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் என்ப வர் நீண்ட இரவெல்லாம் பலநாளாக நினைந்து மலைபோலச் சமைத்த உள்ளத்து ளெழுந்த கோயிலும்,நன்மை தருந் தாயான கங்கையைத் தரித்துள்ள சடைமுடி குளிரும்படி கண்ணப்பர் வாயால் உமிழ்ந்த சிறந்த நீராட்டு நீரும், தூய்மையான மழை பெய்ததால் துன்பமிகுந்த திருக்குறிப் புத் தொண்டர் துணிகளைத் தோய்க்கும் நீர்த்துறையில் மன வலிமையோடு தந்த உடையும், இன்பமாக நீங்குதற்கரிய வன்புடைய மானக்கஞ்சாறனார் சாத்திய அழகிய மயிர்முடி சுற்றிய பஞ்சவடியும், அழகிய விடையூர்தியுடையவராய அவர் மன்மதனிடத்து முன்னர்ச்சினந்து சிவந்த கண்போல மூர்த்தியார் தாம் அன்பினால் முழங்கையைத் தேய்த்துச் சேர்த்துத் தந்த சிவந்த சந்தனமும், அரசனைப்போல உலக மனைத்தையும் காக்குந் திருமால் சாத்திய கண்ணாகிய மல ரும், சாக்கியர் தாம் அன்போடு சாத்திய அழகிய கல்லாகிய குளிர்ந்த மலரும், உண்ணுதற்குத் தக்க உணவாக ஆக்கி மாறன் விருந்தளித்த உணவும், சிறுத்தொண்டர் தந்த பெருமையான பிள்ளைக்கறியமுதும், அரிவாட்டாயரீ தந்த மாவடு என்ற உணவும், நீக்கமுடியாத கருமை நிறைந்த இரவிற் கணம்புல்லர் தமது முடிமேல் ஏற்றிய சிவந்த விளக்கும், ஆகிய இவ் வரும்பொருள்களைப் படைத்து வணங்கத் தகுந்த சிவபெருமானுக்குப் பூசைப் பொருள் படைத்து யாரால் வணங்கக்கூடும் ? கூடாதன்றோ. உமை நாயகமாகிய அவர் ஆரூரர்க்குப் பண்டைக்காலத்தில் எனக்கு நீ பாடும் பாட்டே அர்ச்சனையாம், ஆதலால் தமிழ்ச்சொற் களாற் பாடல் பாடுக என்று பணித்தமையால் அவர் சொற் படியே நீ செய்தாய். நான்கு வேதங்களும் திகைத்து மறைந்தொதுங்குமாறு பித்தனென்று வைதாய்; வைதாலும் அது அவர்க்கு வாழ்த்தாகும் போலும், இது உண்மைதான் என்று அறிந்தேன்.


- மதுரை சொக்கநாதர்


Comments