- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[160-166]
160.
அப்பனியால் வாடாதே யார்க்குந் துயரொழித்தாய்
இப்பனியால் வாடா திரங்காயோ - அப்பரை
161.
மைக்கடல்கொல் லாதபடி வன்கன் மிதப்பித்தாய்
அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த
162.
மன்றிற் பனைவடிவ மாற்றினா யப்பனைமேல்
அன்றிற்புள் வேறெருபுள் ளாக்காயோ - தொன்றுதொட்டுத்
163.
தென்பொதியிற் சாந்தினொடு தென்றலுற வாய்வத்தாய்
அன்புறவென் னோடுமுற வாக்காயோ - முன்பிருந்து
164.
பாடுமிசை யெல்லாமுன் பாவையராச் சேர்த்தாயென்
னோடுமுனி யாதிருக்க வோதாயோ - பாடலாற்
165.
சின்னமொடு காளஞ் சிவிகைபந்தர் முத்தடைந்தாய்
பொன்னே சுடா தணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள்
166.
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினா யாதலினென்
அங்கத்தைப் பூம்பாவை யாக்காயோ-மங்கத்தான்
பொருள்:
திருநாவுக்கரசரைக் கரிய கடல் கொல்லாதவாறு வலிய கற்றூணுடன் மிதக்குமாறு செய்தாய், அவ்வாறு செய்த நீ என்னையும் அக்கடல் கொல்லாமல் எனக்கு உறவாக்க மாட்டாயோ? மிகவும் உயர்ந்த மன்றத்தி லுள்ள பனையின் வடிவத்தை மாற்றினை நீ, அப்பனைமேல் உள்ள அன்றிற் பறவையை வேறொரு பறவை யாக்காயோ? பழமையாகத்தெற்கின்கண் ணுள்ள பொதியமலைச் சந்தனத் துடனும் தென்றற் காற்றுடனும் நட்புக் கொண்டுவந்தாய், அம் மலைச் சந்தனத்தையும் தென்றலையும் என்னுடன் அன்புற்றிருக்க நண்பாக்க மாட்டாயோ? உன் முன் னிருந்து பாடும் இசையெல்லாம் உனக்குரிய பெண்களாகச் செய்து சேர்த்தாய், அவை என்னோடு பகை கொள்ளா திருக்குமாறு சொல்லாயோ ? நீ பாடலாற் சின்னம், காலம், பல்லக்கு, பந்தர் இவைகள் முத்தினால் அமைந்தன வாகப் பெற்றாய், பொன் போன்றாய் ! அம் முத்துக்கள் என்னைச் சுடாமல் நான் அணியுமாறு முத்துமாலைகளைப் பூட்டாயோ? முற்காலத்தில் இறந்த பெண்ணாகிய பூம் பாவையின் எலும்பைப் பெண்ணாக்கினை நீ, எலும்பாய் மெலிந்த என்னுடம்பையும் அழகிய பாவைபோன்ற நல் வடிவம் ஆக்கமாட்டாயோ?
Comments
Post a Comment