தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [183-190]

 

தமிழ் விடு தூது
[183-190]


183. 
.................................................................. வீறாகக்

184. 
கற்பார் பொருள்காணார் காசுபணங் காணிலுனை 
விற்பா ரவர்பானீ மேவாதே - கற்றாரை

185. 
எள்ளிடுவார் சொற்பொருள்கேட் டின்புடூர் நாய்போலச் 
சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப்

186. 
பாயிரமுன் சொன்ன படிபடியா மற்குழறி 
ஆயிரமுஞ் சொல்வார்பா லண்டாதே - ஆய்தருநூல்

187. 
ஓதி யறியாத வொண்பே தையருடனே 
நீதி முறையா நிகழ்த்து நூல் - பேதைமையாங்

188. 
காணாதாற் காட்டுவான் றான்காணான் கண்ணெதிரே 
நாணா திராதே நவிலாதே - விணாக

189. 
ஆற்றினளவறிந்து கல்லா தவையஞ்சுங் 
கூற்றினர்பா லேகாதே கூடாதே - போற்றாரை

190. 
வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்வியென்று 
பூண்டாய் நீ தானே பொருளன்றோ - ஆண்ட



பொருள்:

பெருமையாகக் கற்பார் பலர் அந் நூலிலுள்ள பொருளைக் காண மாட்டார். காசு பணம் தம் கைக்கு வருவதையறிந்தால் உன்னை (தமிழை ) விற்று விடுவார். அத்தகைய கொடியோர் பால் நீ போய்ச் சேராதே. கற்றவர்களைக் கண்டால் இகழ்ந்து பேசுவார், அவர்கள் சொல்லும் பொருளைக் கேட்டு இன்பமடையார். நாயைப் போலச் சல்ளென்று குரைத்துத் துரத்துவார் அப் பான்மையுடையாரருகே சாராதே. தெளிவாகத் தமிழ்ப் பாயிரத்திற் கூறியபடி அடங்கியிருந்து படியாமல் ஆயிர மும் கற்று விட்டதாகக் கூறுவார், அவர் பால் நீ அணு காதே. ஆராய்தற் குரிய நூல்களைக் கற்றறியாத விளக்கமான மூடர்களுடனே நீதி முறையாகக் கூறும் அறி வுரைகளெல்லாம் அறியாமையாகும். ஒன்றும் அறியாத ஒருவனுக்கு நூற்பொருள் காட்டுவோன் அவன் கண்ணுக்கு முன்னே ஒன்றும் அறியாதவனாக மதிக்கப்படு வான். நாணாமல் இராதே (நாணியிரு ) வாய் திறந்து கூறாதே. வீணாகக் கற்கு முறையறிந்து கல்லாமல் அவையைக் கண்டு அஞ்சி நடுங்கும் சொற்பெருக்குடையவர்பாற் செல் லாதே. அவர்களுடன் நட்புக்கொள்ளாதே. அருமையறிந்து உன்னைப் போற்றாதவரை நீ விரும்பாதே. என்றுங் கெடுதலில்லாத சிறந்த செல்வமானது கல்வியே யென்று மனத்துட் கொண்டாய். ஆதலால் நீதான் சிறந்த பொருள் வேறு சிறந்த பொருளில்லை.


- மதுரை சொக்கநாதர்

Comments