தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [190-198]

 

தமிழ் விடு தூது
[190-198]



190. 
................................................................ ஆண்ட

191. 
வலவா நலவா வடுதுறையி லுன்போல் 
உலவாக் கிழிபெற்றா ருண்டோ - நலவிருப்ப

192. 
தாக்கவரு செங்கலைப்பொன் னாக்கினாய் மண்முழுதும் 
மாக்கனக மாக்கிவிட வல்லையே -நோக்குபுகார்

193. 
பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு 
கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே -தேடியருள்

194. 
நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே 
கல்லார்கட் பட்டதிருக் கண்டாயே - கல்லார்பால்

195. 
ஏகாதே யன்பிலா சிந்திரன்போல் வாழ்ந்தாலும் 
போகாதே யங்கே புசியாதே- மாகவிஞர்

196. 
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந் தாரென்னும் - மா மகிமை

197. 
சேர்ந்ததுன்பா லன்றோ திருப்பாற் கடலமுதம் 
ஆர்ந்தவர்க்கல் லாதுபசி யாறுமோ - சேர்ந்துன்னை

198. 
நம்பாதார் விதி தணுகாதே நல்லார்கள் 
தம்பா லிருந்து தரித்தேகி - வம்பாகப்



பொருள்:

என்னையாட் கொண்ட வல்லவா!நல்ல திருவாவடு துறையில் உலவாக்கிழி பெற்றவர் உன்னைப் போல் ஒருவர் உளரோ? நல்ல விருப்பத்தை யுண்டாக்கு வதற்கு அங்குக் கிடந்த செங்கல்லைப் பொன்னாக்கினை. மண்ணுலக முழுவதும் பொன்னுலக மாக்குவதற்கும் வல்லவன் நீயே. யாவரும் விரும்பிப் பார்க்கும் சிறப்புடைய காவிரிப்பூம் பட்டினத்தைக் குறித்துப் பாடிய ஒரு வஞ்சி நெடும் பாட்டினாற் பதினாறு கோடி பொன் கொண்டது நின் வெற்றியைக் குறித்ததே. பொருளைத் தேடி வழங்கும் நல்லாரிடத்திற் சேர்ந்த வறுமையினும் கல்லாத மூடர்பாற் சார்ந்த செல்வம் துன்பத்தை விளைப்பதாம், இதனை நீ கண்டாய் பலரிடத்தும். ஆதலால் கல்லாத கயவர்பாற் செல்வ மிருப்பினும் அவர்பாற் செல்லாதே. உன் மேல் அன்பில்லாதவர் இந்திரனைப்போலச் செல்வத்துடன் வாழ்ந்திடினும் அவர்பாற் போகாதே; அங்கே உண வுண்ணாதே தாம் இன்புறுவதற்குரிய கல்வியால் உலகத் தாரும் இன்ப மடையக் கண்டு அக் கல்வியையே பெரும் புலவர் கற்றறிந்தார் விரும்புவர் என்னும் பெருஞ் சிறப்பு உன்பா லன்றோ சேர்ந்தது? திருப்பாற்கட லமிர்தம் உண்டவர்க் கல்லாமல் உண்ணாதவர்க்குப் பசி நீங்குமோ? நீங்காது. உன்னையே சேர்ந்து உன்னை நம்பி வாழாத மக்கள் தெருகினும் அணுகாதே. நல்லறிஞர்களிடத்தி லிருந்து தங்கிச் செல். அவ்வாறு சென்று,


- மதுரை சொக்கநாதர்

Comments