- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[207-218]
207.
...............................................................இட்டமணிச்
208.
சிங்கா தனத்திற்சிறந்ததிகு வோலக்கம்
எங்கா கிலுமொருவர்க் கெய்துமோ - பைங்கழல்சூழ்
209.
தேங்கமலத் தேக தெரிசனஞ் செய்தவர்க்கே
பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் - ஓங்கமல
210.
மையி லடியில் வணங்காத் தலையொன்றைக்
கையி லளித்த கடவுளும் -மொய்யிழந்த
211.
மானந் தனக்கு வகுத்தகடம் பாடவிக்கு
மானத் தனைவகுத்த வாளவனுந் - தேவங்
212.
கணிமலர்த்தா ணெஞ்சூ டழுத்தியழுத் தாதே
மணிமுடிக ணீக்கி வணங்கக் - கணநாதர்
213.
ஓது துனி யோடுசின முற்றபகை செற்றமுரட்
போத முனிவர் புடைசூழத் - தீதில்
214.
அரிய திசைப்பால ரத்தமுத றாங்கித்
தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப்- பரவியே
215.
முன்னிருவ ரெண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய- முன்னே
216.
நதிக ளெனக்கண்டு நந்திபிரம் போங்க
உதகவிரு பாலி னொதுங்கிப் -பதினெண்
217.
குலத்தேவர் தம்மகுட கோடிபதி னெட்டு
நிலத்தோர் முடியா னெரிய - நிலத்தே
218.
செருக்குஞ் சினேகமுற்ற தேவியுடனே
இருக்குஞ் சினகரத்து ளெய்திப்-பொருக்கெனப்போய்
பொருள்:
வானவர்க்கிறைவனால் இடப்பட்ட மணிக ளழுத்திய அரியணைமேல் வீற்றிருக்கும் அரசிருக்கை சொக்கருக்கு எய்தியதுபோல் எங்கேனும் ஒரு கடவு ளர்க்குக் கிட்டுமோ? கிடைப்பதரிது. ஒளிரும் வீரக்கழல் புனைந்த இனிய தாமரை மலர்போன்ற சிவபெருமான் திரு. வடிக் காட்சியைக் கண்டு அவர்க்கே செந்தாமரைப் பூப் போன்ற கண்ணைப் பறித்துச் சாத்திய திருமாலும், உயர்ந்த தூய்மையான குற்றமற்ற திருவடியில் வணங்காத தலையொன் றைக் கையிற் கொடுத்த தெய்வமாகிய பிரமனும், இழந்த வலிமையும் பெருமையும் தனக்கு வகுத்துத்தந்த கடம்பா டவிக்கு விமானத்தை வகுத்துத்தந்த இந்திரனும், ஆங்குத் தேன் ஒழுகும் அழகிய மலர்போன்றபாதத்தை நெஞ்சினுட் பதித்து மணிகள் அழுத்திய முடிகள் ஒன்றோடொன்று, அழுத்தாமல் நீக்கி வணங்கும் பொருட்டுக் கணநா தரும், கூறுகின்ற வெறுப்பும் சினமும் கொண்ட உட்பகையைத் தொலைத்த வலியுடைய ஞானமுனிவர்களும் அருகில் சூழ்ந்து வரவும், தீமையில்லாத அருமையான திசைக் காவலர்கள் சுண்ணாடி முதலியவற்றை யேந்தி நின்று காட்சிக் குறிப்பைக் கண்டு ஏவல்செய்து நிற்கவும், துதித்து முன்நின்று இருவரும் எண்மரும் நிறைந்த பதினொருவரும் பன்னிருவரும் ஆகிய முப்பத்து மூவரும் ஏவல் செய்யவும் நந்திதேவர் தமக்கு முன்னே நிற்கும் கூட்டத்தை வெள்ளப் பெருக்கு என்று பிரம்பினை எடுத்துப் புடைக்க ஒங்கிய போது வெள்ளம் இருபுறமும் ஒதுங்குவதுபோல ஒதுங்கிப் பதினெட்டுக் குலத்தேவர் தம் கோடிக்கணக்கான முடிகள் பதினெட்டு நிலத்தோர் முடிகளால் நெரியவும் உலகத்திற் செருக்கும் நண்பும் கொண்ட தேவியாகிய அங்கயற் கண்ணம்மையுடன் வீற்றிருக்கும் திருக்கோயிலுட் பொருக் தெனச் சென்று அடைந்து.
Comments
Post a Comment