தமிழ் விடு தூது [219-230]

 

தமிழ் விடு தூது
[219-230]


219. 
எந்தாயென் றேத்து மிடைக்காடன் பின்போன 
செந்தா மரைபோற் றிருந்தாளும் - வந்துமனந்

220. 
தேறிக் கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு 
மாறித் திரும்பு மணிக்குறங்குஞ் - சீறிப்

221. 
பணிக்கற்கு மாழுப் படையுடைவருள் சேர்த்து 
மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத்

222. 
தொண்டுபடு வந்தி சொரித்திடும்பிட் டள்ளியள்ளி 
உண்டுபசி தீர்ந்த வுதரமும் - அண்டுமொரு

223. 
தாய்முலைப்பா லுண்டறியாத் தாம்பன் றிக் குட்டிகளின் 
வாய் முலைப்பா லூட்டியபூண் மார்பமுந் - தூயமுடி

224. 
ஆணிக்கனகத் தழுத்த வழுதிக்கு 
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப்

225. 
பூம்படலை யாத்திப் புனைமலரைப் பூணாமல் 
வேம்பலரைப் பூண்ட வியன்புயமும்-ஓம்புகொடி

226. 
வாதிற் கரிக்குருவி வாழ்தற் குபதேசம் 
காதிற் புகன்ற கனிவாயும் - திதில்சொல்

227.
வாயிலா நீயிருந்து வாழும் படியுனக்குக் 
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப்

228. 
பெண்ணீராள் கண்ணீர் பெருகத் தழுவித்தம் 
கண்ணீரா லாற்றியருள் கண்களும் - தெண்ணீரார்

229. 
பண்சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும் 
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து

230. 
கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித் 
தொண்டுசெய்து தாண்முடிமேற் சூடியே-மண்டும்


பொருள்:

எந்தாயே என்று துதித்துச் சென்ற இடைக் காடன் பின்னடந்து சென்ற செந்தாமரை மலர் போன்ற திருவடியும், வந்து சிந்தை தெளிந்து கழுத்தினை யறுக்கத் தொடங்கிய தென்பாண்டி நாட்டு மன்னன் பொருட்டு இடக்கால் வலக்காலாகத் திரும்பிய அழகிய துடையும், போர்முறை கற்பிக்கும் ஒரு பணிக்கனுக் குப் பகையாகச் சினந்து ஆயுதமும் உடைவாளும் சேர்த்து அழகிய கச்சிறுக்கிக் கட்டிய இடையும், அடிமையாகி வழிபட்ட வந்தியின் பொருட்டுத் துணிக்குப் பொருத்த மாக இட்ட பிட்டுணவைக் கரத்தால் அள்ளியள்ளி யுண்டு பசி நீங்கிய வயிறும், ஒரு தாயையடுத்தும் முலைப்பாலுண் டறியாத அவர்தாம் பன்றிக் குட்டிகளின் வாயின்முலைப் பாலை யூட்டிய மார்பும், ஆணிப் பொன்னாற் செய்த தூய முடியிற் பதிப்பதற்காக ஒரு பாண்டியனுக்கு மாணிக்கங் கொணர்ந்து விற்ற மலர்போன்ற கரமும், உரிமைக்காக அழகிய தழைவாய்ந்த ஆத்திமலரைப் புனையாமல் வேப்ப மலர்மாலை சூடிய அகன்றதோளும், காக்கை செய்த போரால் வருந்திய கரிக்குருவி வாழ்வதற்குக் காதில் உபதேசம் செய்த கோவைக் கனிபோன்ற வாயும், குற்றமில்லாத சொல் வாயிலாக நீயிருந்து வாழுமாறு உனக்குக் கோயி லாகக் கொடுத்த சங்கக் குழையணிந்த செவியும், வைசிய குலத்துப் பெண்ணொருத்தியின் பொருட்டுச் சென்று அவள் கண்ணீர் பெருகியழக் கண்டு அவளைத் தழுவித் தமது கண்ணீரால் அவள் துயரத்தை யாற்றிய இருகண் களும், தெளிந்த நற்பண்புடையார் ஆகிய மணிவாசகப் பெருமான் பாடிய இசையுடன் கூடிய பாடலுக்கும் வந்தி தந்த பிட்டிற்கும் மண்சுமந்த ஒளியழகு வாய்ந்த சென்னி யும் ஆகிய இவற்றையெல்லாம் கண்களில் எந்திக் கண்டு களிகூர்ந்து மனம் கசிந்து கசிந்து உருகிப் பணிபுரிந்து திருவடித்தாமரையை முடிமேற் புனைந்து.



Comments